கோவையில் RTO அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : மர்ம கும்பல் இமெயில் - வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை !!!
13 இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என மிரட்டல்; ஒரு மணி நேரச் சோதனைக்குப் பின் புரளி என உறுதி !!!
கோவை, துடியலூரில் உள்ள வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு (RTO) இன்று காலை இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் தீவிர சோதனைக்குப் பிறகு இது வெறும் புரளி என்பது தெரியவந்தது.
துடியலூர் RTO அலுவலகத்திற்கு வந்த மிரட்டல் இமெயிலில், "நாடு கடந்த திராவிட அரசு" (Exiled Dravidian Government) என்று தங்களைக் குறிப்பிட்டுள்ள மர்ம கும்பல், மெட்ராஸ் டைகர்ஸ், தமிழ் விடுதலைப் படை உள்ளிட்ட பல்வேறு தடை செய்யப்பட்ட மற்றும் புதிய அமைப்புகளின் பெயர்களைப் பயன்படுத்தி உள்ளது.
நேற்று மதியம் 1.15 மணி அளவில் அலுவலகத்தில் 13 குண்டுகள் வெடிக்கும் என்றும், உள்ளே இருப்பவர்களை உடனடியாக வெளியேறுமாறும் அந்த இமெயிலில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மார்ச் 31 முதல் "நேரடி நடவடிக்கை வாரமாக" (Direct Action Week) அறிவித்து, தமிழக அரசுக்கு எதிராகப் போர் பிரகடனம் செய்வதாக அந்த மர்ம கும்பல் தெரிவித்து உள்ளது. அந்த மிரட்டல் கடிதத்தில் ஆளும் தி.மு.க அரசு மற்றும் முதலமைச்சர் மீது அடுக்கடுக்கான அரசியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு உள்ளன.
முஸ்லிம்கள் மீது உபா (UAPA) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்துதல்.
முறைகேடாகப் பெற்ற நிதியைக் காக்க ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வுடன் ரகசியக் கூட்டணி வைத்து இருப்பதாகக் குற்றச்சாட்டு.
என்கவுண்டர்கள், காவல்துறை அராஜகம் மற்றும் ஊடகங்களைக் கட்டுப்பாட்டில் வைத்து இருத்தல்.
போதைப்பொருள் வர்த்தகத்தில் முதலமைச்சர் குடும்பத்திற்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி, அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டு உள்ளனர்.
போலீசார் அதிரடி சோதனை:
மிரட்டல் குறித்துத் தகவல் அறிந்தவுடன் துடியலூர் RTO அலுவலக அதிகாரிகள் போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் வருகை:
கோவை மாவட்ட வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றுதல் பிரிவு (BDDS) நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சோதனை:
அலுவலகத்தின் அனைத்து அறைகள், வாகன நிறுத்துமிடம் மற்றும் வளாகம் முழுவதும் சுமார் ஒரு மணி நேரம் நவீனக் கருவிகளைக் கொண்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டுகள் அல்லது வெடிபொருட்கள் எதுவும் சிக்காததால், இது மர்ம நபர்களால் பரப்பப்பட்ட வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. இதே போன்ற மிரட்டல் கடிதங்கள் கோவையில் உள்ள மற்ற RTO அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
தேர்தல் நெருங்கும் வேளையில், அரசியல் காரணங்களை முன்னிறுத்தி விடுக்கப்பட்டுள்ள இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இமெயில் அனுப்பிய நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்

0 கருத்துகள்: