“நம்பிக்கை இல்லாதவன் தான் இரண்டு தொகுதியில் நிற்பான்” – த.வெ.க தலைவர் விஜயை விமர்சித்த சீமான் !!!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், த.வெ.க தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்து, மக்கள் மீது நம்பிக்கை இல்லாதவன் தான் இரண்டு தொகுதியில் நிற்பான்” எனக் கூறினார்.
அரசியல் என்பது தன்னலமற்ற சேவையாக இருக்க வேண்டியது. ஆனால் தற்போது அது பணம் கொழிக்கும் தொழிலாக மாறிவிட்டது. இலவசங்களை சாதனைகளாக மாற்றி மக்களை ஏமாற்றி வருகின்றனர். நாட்டில் ஊழல் மற்றும் லஞ்சம் தேசியமயமாக்கப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டினார்.
“மக்கள் வாக்கிற்கு பணம் வாங்கும் நிலை உருவாகி உள்ளது. இதனால் மக்கள் பணி முற்றிலும் பாதிக்கப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக இதை எச்சரித்து வருகிறோம். ஆனால் யாரும் கவனிக்கவில்லை,” என்றார்.
மேலும், “ஆட்சி முடியும் நேரத்தில் தான் மக்கள் தேவைகளை கேட்கிறார்கள். மிக்சி, கிரைண்டரைத் தாண்டி தற்போது பிரிட்ஜ் கொடுக்கும் நிலைக்கு வந்து உள்ளனர். ஆனால் உண்மையான வளர்ச்சி எங்கே ?” என கேள்வி எழுப்பினார்.
கூட்டணி அரசியலை விமர்சித்த சீமான், “தேர்தல் வெற்றிக்காக கட்சிகள் கூட்டணிகளை மாற்றிக் கொண்டே வருகின்றன. ஒருகாலத்தில் ஊழல் கட்சிகள் என்று கூறியவர்கள் இன்று அதே கட்சிகளுடன் இணைகிறார்கள். இதுவே சந்தர்ப்பவாதம்,” என்றார்.
பா.ஜ.க மற்றும் தி.மு.க கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி பெற்றதாக குற்றம் சாட்டிய அவர், “ஒரு ரூபாய் கூட வாங்காத கட்சி நாம் தமிழர் கட்சி தான்” என தெரிவித்தார்.
“பதவி ஆசை இல்லாமல் மக்களுக்காக தனித்து போட்டியிடுகிறோம். மூன்றாவது இடத்தில் இருந்த எங்களை மக்கள் முதல் இடத்திற்கு கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது,” என்றும் கூறினார்.
மேலும் தி.மு.க அரசை விமர்சித்த அவர், “நல்லாட்சி இருந்தால் மக்கள் தாமாகவே மீண்டும் ஆட்சிக்கு வரச் சொல்வார்கள். அதை நீங்கள் சொல்ல வேண்டிய அவசியமில்லை,” என்றார்.
சாதி, மத மற்றும் பண அடிப்படையிலான அரசியலை கடுமையாக எதிர்த்த சீமான், “சாதி அரசியலில் சமத்துவம் அழியும், மத அரசியலில் மனிதம் அழியும், பண அரசியலில் ஒழுக்கம் அழியும்” எனக் கூறினார்.
“நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே 10 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வருகிறோம். இயற்கையை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்,” என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, “கூட்டமாக நிற்பவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என்ற எண்ணம் மக்கள் இடையே உள்ளது. ஆனால் தனியாக நிற்பதற்கே உண்மையான வீரம் தேவை. எனக்கு நேர்மை உள்ளது,” என்றார்.
மேலும், “என்னை தோற்கடிப்பவர்கள் என் மக்கள் தான். ஒருநாள் அவர்கள் என்னை வெற்றிபெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது,” என்றும் குறிப்பிட்டார்.
இந்த பிரச்சாரத்தின் போது, பொதுமக்களை கவரும் வகையில் பாடல் பாடியும் சீமான் வாக்கு சேகரித்தார்.

0 கருத்துகள்: