வெள்ளி, 15 மே, 2026

இ.பி.எஸ் உள்பட 22 எம்.எல்.ஏ க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி சி.வி.எஸ் தரப்பில் சபாநாயகரிடம் மனு !!!

SHARE

 இ.பி.எஸ் உள்பட 22 எம்.எல்.ஏ க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி சி.வி.எஸ் தரப்பில் சபாநாயகரிடம் மனு !!!

கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த எடப்பாடி பழனிசாமி உள்பட 22 அதிமுக எம்.எல்.ஏ க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சி.வி.சண்முகம் தலைமையிலான அணியினர் சபாநாயகரிடம் மனு அளித்து உள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் சபாநாயகர் ஜெ.சி.பிரபாகரை நேரில் சந்தித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலான அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், கொறடா உத்தரவை மீறிய அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட 22 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மனுவை வழங்கினர்.

அதைத் தொடர்ந்து சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தினர்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், "கடந்த மே 09, 10 ஆகிய தேதிகளில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அ.தி.மு.க வின் சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி.வேலுமணி, என்னை கொறடாவாகவும் தேர்வுச் செய்து இருந்தனர். இதைத் தொடர்ந்து, த.வெ.க அரசு மீதான நம்பிக்கை கூறும் தீர்மானத்தில் என்ன வாக்களிக்க வேண்டும் என்று நாங்கள் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அறிவுறுத்தி இருந்தோம்.

அரசு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று வாட்ஸ் அப் மற்றும் மின்னஞ்சல் மூலம் அ.தி.மு.க எம்.எல்.ஏ க்களுக்கு கடிதம் அனுப்பி இருந்தோம். இந்த நிலையில், 47 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களில் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் கொறடா உத்தரவை ஏற்று நடந்தார்கள். மற்ற 22 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கொறடா உத்தரவை ஏற்று நடக்கவில்லை. இதை அடுத்து, இன்று சபாநாயகரை சந்தித்து கொறடா உத்தரவை மீறிய 22 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மனு அளித்து உள்ளோம்.

பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது தான் விதி. உச்ச நீதிமன்றம் இதை உறுதிப்படுத்தி உள்ளது. அ.தி.மு.க வில் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கொறடா உத்தரவை ஏற்று உள்ளனர். இருதரப்பு கடிதத்தையுமே சபாநாயகர் அங்கீகரிக்கவில்லை. சபாநாயகர் உரிய முடிவுவை எடுப்பார்" என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "ஒரு இயக்கத்தில் கருத்து வேறுபாடு காரணமாக விரிசல் ஏற்பட்டால், அந்த தேதியில் இருந்து எந்த முடிவும் எடுக்க முடியாது. குறிப்பாக யாரையும் நீக்குவது செல்லாது. சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான அன்றில் இருந்து விரிசல் உள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் தான் பொதுக் குழுவைக் கூட்டி எதற்கு இந்த தோல்வி ஏற்பட்டது என்று ஆலோசிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி யார் பதவியில் இருந்தாலும் அவர்கள் அப்படியே இருப்பார்கள். யார் ?பதவியில் இருந்து நீக்கினாலும், சேர்த்தாலும் அது செல்லாது. இதுதான் சட்ட விதி.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி வந்தது இதே விதியின்படி தான். அவர் எடுத்து உள்ள எந்த நடவடிக்கையும் செல்லாது என்பதைத் தான் பொதுமக்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். தேவையில்லாத நடவடிக்கைகளை விட்டு விட்டு ஆரோக்கியமாக பொதுக் குழுவை கூட்டி மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளோம், இந்த தோல்விக்கு என்ன காரணம் என்று ஆலோசிக்க வேண்டும்.

கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம். அவர் எல்லோரையும் போங்கள் போங்கள் என்று சொல்கிறார். தயவுச் செய்து பிரிந்து போனவர்கள், நீக்கம் செய்யப்பட்டவர்கள் என எல்லோரையும் வாருங்கள் என்று சொல்லி ஒற்றுமைப்படுத்த வேண்டும். பொதுச் செயலாளர் நீக்கிய பதவி எதுவும் செல்லாது. அவர்கள் அப்படியே அந்த பதவிகளில் தொடர்வார்கள்" என்றார்.


அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியில் உள்ள 22 சட்டமன்ற உறுப்பினர்கள் நடந்த வாக்கெடுப்பில் த.வெ.க அரசுக்கு எதிராக வாக்களித்து இருந்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலான அணியில் உள்ள 25 சட்டமன்ற உறுப்பினர்கள் த.வெ.க அரசுக்கு ஆதரவுத் தெரிவித்து வாக்களித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: