வெள்ளி, 15 மே, 2026

அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்குவதில் நீடிக்கும் தாமதம்; காரணம் என்ன ?

SHARE

 அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்குவதில் நீடிக்கும் தாமதம்; காரணம் என்ன ? 

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்று 5 நாட்களாகியும் அமைச்சர்களின் துறைகள் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளன.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதை அடுத்து பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் மே மாதம் 10-ஆம் தேதி, தமிழக ஆளுநர் முன்னிலையில் முதலமைச்சராக பதவியை ஏற்றுக் கொண்டார். இவருடன், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் கட்ட தலைவர்களான என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா, வெங்கட்ராமன் ஆகிய 9 பேரும் அமைச்சர்களாக பதவியை ஏற்றுக் கொண்டனர்.

கடந்த மே 11-ஆம் தேதி, சட்டப் பேரவை கூடிய போது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டனர். பின்னர், நேற்றைய தினம் சட்டப் பேரவையில் தமிழக வெற்றி கழகம் 144 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்று, ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபித்தது. அடுத்த கட்ட நடவடிக்கையாக தமிழ்நாட்டில் அமைச்சர்களை நியமிப்பதற்கான பணியில் த.வெ.க தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் முதலமைச்சருடன் சேர்த்து மொத்தம் 34 அமைச்சர்கள் பதவியேற்கலாம். இதில் மே 10 ஆம் தேதி முதலமைச்சர் பதவியேற்ற போது முதல்வருடன் சேர்ந்து 9 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். ஆனால் பதவியேற்றுக் கொண்ட 9 அமைச்சர்களுக்கும் இதுவரை இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை. கேரளா சென்று உள்ள தமிழ்நாட்டின் ஆளுநர் அர்லேகர், தமிழகம் வந்த பிறகு அமைச்சரவைப் பட்டியலை தயார் செய்து வழங்க தமிழக வெற்றிக் கழகம் தயாராக உள்ளது. ஆனாலும் இதுவரை அமைச்சரவை பட்டியல் குறித்து தமிழக அரசு எந்த வித தகவல்களையும் தெரிவிக்காமல் தாமதப்படுத்தி வருகிறது. இந்த தாமதத்திற்கு, அ.தி.மு.க இரண்டாக பிளவுபட்டு இருப்பதே காரணம் என தகவல்கள் பரவி வருகின்றன.

குறிப்பாக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக 144 உறுப்பினர்களும் எதிராக 22 உறுப்பினர்களும் நடுநிலையாக 5 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

இதில் அ.தி.மு.க வின் எஸ்.பி. வேலுமணி, சி.வி சண்முகம் தலைமையிலான அ.தி.மு.க உறுப்பினர்கள் 25 பேர் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க ஆதரவாகவும், எடப்பாடி தலைமையிலான 22 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதை எதிர்த்தும் வாக்களித்தனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், தனக்கு ஆதரவு அளித்த சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி தலைமையிலான அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து இருந்தார்.

தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்த அ.தி.மு.க வின் எஸ்.பி.வேலுமணி, சி.வி சண்முகம் தலைமையிலான அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக த.வெ.க விற்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் 5 பேர், அமைச்சரவை பதவிகளை கேட்பதாகவும் அதில் 3 பேருக்கு அமைச்சர் பதவி வழங்க முதல்வர் ஜோசப் விஜய் முன் வந்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே த.வெ.க விற்கு ஆதரவு அளித்த காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகளை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படும் சூழலில், அ.தி.மு.க வின் பிளவு தற்போது அமைச்சரவையை அறிவிப்பதில் தாமதத்தை ஏற்படுத்தி உள்ளது.

நேற்றைய தினம், அ.தி.மு.க வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக வாக்களித்த சட்டமன்ற உறுப்பினர்களை மாவட்ட செயலாளர்கள் பதவியில் இருந்து நீக்கி உள்ளார். ஆனால், தங்களை எடப்பாடி பழனிசாமி நீக்கியது செல்லாது என எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள், தொடர்ந்து விளக்கம் அளித்து வருகின்றனர்

அ.தி.மு.க உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்டு உள்ள உட்கட்சிப் பூசல் காரணமாக தற்பொழுது அ.தி.மு.க வின் தலைமை யார் பக்கம் என்ற கேள்விக்குறி எழுந்து உள்ளது.

மேலும் அ.தி.மு.க வின் சட்டமன்ற குழு தலைவர் மற்றும் அ.தி.மு.க வின் கொறடா இதுவரை நியமிக்கப்படாத சூழலில், அ.தி.மு.க வில் எந்த அணியை சார்ந்தவர்களை சட்டமன்ற குழு தலைவராகவும், சட்டமன்ற கொறடாவாகவும் நியமிக்க உள்ளனர் என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.

இது மட்டுமல்லாமல் அ.தி.மு.க வின் தலைமையை மீறி சி.வி சண்முகம் தரப்பினர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு வழங்கி இருப்பதாகவும், அது முற்றிலும் செல்லாது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

இந்த சூழலில் த.வெ.க விற்கு ஆதரவளித்த அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை பதவி வழங்கும் பட்சத்தில் அதிமுகவில் ஏற்பட்டு உள்ள உட்கட்சி பூசல் காரணமாக, அமைச்சரவையில் சட்ட சிக்கல் ஏற்பட்டுவிடுமோ ? என்ற ஒரு குழப்பத்தில் முதல்வர் விஜய் தற்பொழுது இருந்து வருகிறார்.

இதன் காரணமாக யார் யாருக்கு எந்தெந்த இலாக்காக்களை ஒதுக்குவது என்ற குழப்பங்கள் நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே அமைச்சரவை பட்டியல் தயாரிப்பது தாமதம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: