செவ்வாய், 12 மே, 2026

தமிழ்நாட்டில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவு !!!

SHARE

 தமிழ்நாட்டில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவு !!!

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் அமைந்து உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் இரண்டு வாரத்திற்குள் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. கோயில்கள், பள்ளிக் கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருவதாக திங்கட்கிழமை செய்தி வெளியான நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இது தொடர்பான தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, பொதுத் தலங்கள் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில், 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைளை மூட உத்தரவு வெளியாகி உள்ளது.

2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், பெரும்பான்மை பெறாத காரணத்தால், காங்கிரஸ் கூட்டணி மற்றும் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், வி.சி.க ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்து உள்ளது. தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் மே 10-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

அப்போது, தமிழ்நாட்டில் 2 மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு, 200 யூனிட் வரை இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ உருவாக்கப்படும், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் வகையில், அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார்.

இந்நிலையில், இன்று காலை மதுபானக் கடைகள் மூடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்ட அரசாணையில், “தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் இருந்து 500 மீட்டர் வரை அமைந்து உள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி, இந்த மூன்று இடங்களில் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு வழிபாட்டுத்தலங்கள் அருகில் உள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகில் உள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டு உள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: