செவ்வாய், 12 மே, 2026

மக்கள் தீர்ப்பை ஏற்று தவெகவுக்கு அதிமுக ஆதரவு - சி.வி. சண்முகம் அதிரடி அறிவிப்பு !!!

SHARE

 மக்கள் தீர்ப்பை ஏற்று தவெகவுக்கு அதிமுக ஆதரவு - சி.வி. சண்முகம் அதிரடி அறிவிப்பு !!!

மக்கள் தீர்ப்பை ஏற்று த.வெ.க வுக்கு அ.தி.மு.க ஆதரவு தெரிவிப்பதாக சி.வி. சண்முகம் அதிரடியாக கூறி உள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. 234 தொகுதிகளில் 169 இடங்களில் போட்டியிட்ட நிலையில், 47 தொகுதிகளில் மட்டுமே அந்த கட்சி வெற்றி பெற்றது.

முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் உட்பட பலர் இந்த தேர்தலில் டெபாசிட் இழந்தனர். இதே போல், 2021 சட்டமன்ற தேர்தல், 2024 மக்களவை தேர்தலிலும் அது தோல்வியையே தழுவியது. குறிப்பாக, 2024 மக்களவை தேர்தலில் ஒரு தொகுதியில் கூட அக் கட்சி வெற்றிப் பெறவில்லை. இது மாதிரியான தொடர் தோல்விக்கு கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தான் காரணம் என அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் தற்போது போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

மேலும், கட்சி இரண்டாக உடைந்து விட்டதாக பரவலாகக் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று (மே 12) சென்னை எம்.ஆர்.சி., நகரில் அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் சி.வி. சண்முகம் தலைமையில் அக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய சி.வி. சண்முகம், "சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி தோல்வி அடைந்து இருக்கிறது. இதனை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். தேர்தல் தோல்விக்கு பின்னர் ஒரு சில முன்மொழிவுகளை எடப்பாடி பழனிசாமி முன்வைத்தார். அதனை கேட்டு நாங்கள் அதிர்ச்சிக்கு உள்ளானோம். தி.மு.க தன்னை முதலமைச்சராக ஆதரிக்க தயாராக இருக்கின்றது என்று அவர் கூறினார். இது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

இந்த இணைவு வேண்டாம் என்று கூறினோம். ஆனால், இதை ஏற்க மறுத்து விட்டார். தி.மு.க-வை எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க. 53 ஆண்டுகளாக இதையே செய்து வருகிறோம். தி.மு.க-வுடன் இணைந்தால் அ.தி.மு.க இல்லாமல் போய்விடும். அ.தி.மு.க-வை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்திலும், புத்துயிர் கொடுக்கப்பட வேண்டிய நிலையிலும் நாங்கள் இருக்கிறோம்.

இதனை தொடர்ந்து அ.தி.மு.க-வின் பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் கூடி, எடப்பாடி பழனிசாமி ஆதரவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினோம். த.வெ.க தலைவர் விஜய்-க்கு மக்கள் வாக்களித்து உள்ளனர். மக்கள் தீர்ப்பை ஏற்று த.வெ.க தலைவர் விஜய்-யை ஆதரிப்பதாக தீர்மானம் எடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், கட்சியின் தொடர் தோல்விக்கான காரணங்களை முழுமையாக ஆராய, கட்சியின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பொதுக் குழுவை கூட்ட நாங்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளோம். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அ.தி.மு.க பொதுக்குழுவை கூட்ட வேண்டும், கூட்டுவார் என நம்புகிறோம்.

தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து மீண்டும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி அமைய அனைவரும் ஒன்றிணைந்து பேசி முடிவெடுக்க பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அ.தி.மு.க இனி எந்த கூட்டணியிலும் இல்லை. அ.தி.மு.க தற்போது புதிய முடிவை எடுக்க வேண்டும் இந்த கட்சி காப்பாற்றப்பட வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "சட்டமன்ற குழுவின் தலைவராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கட்சியின் கொறடாவாக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், சட்டமன்ற துணைத் தலைவராக எம்.எல்.ஏ ஹரி, செயலாளராக முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இது குறித்து முறைப்படி தற்காலிக சபாநாயகரிடம் கடிதம் வழங்கி உள்ளோம்" என்று அவர் கூறினார்.


சி.வி. சண்முகத்தைத் தொடர்ந்து பேசிய எஸ்.பி. வேலுமணி, "நாங்கள் அ.தி.மு.க-வை இரண்டாக உடைக்கிறோம் என அவதூறு பரப்படுகிறது. எங்களுக்கு அந்த நோக்கம் இல்லை. முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சி இது. தொடர் தோல்வி காரணமாக சில கேள்வி எழுந்து உள்ளது. இது குறித்து ஆரோக்கியமான விவாதம் இன்று நடைபெற உள்ளது. பொதுச்செயலாளர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகின்றோம்" என்றார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: