சனி, 16 மே, 2026

கடை மூடியது தெரியாமல் ‘சரக்கு’ வாங்கக் காத்து இருந்த மதுப் பிரியர்கள் ; கோவையில் அரங்கேறிய விநோதக் கூத்து !!!

SHARE

 கடை மூடியது தெரியாமல் ‘சரக்கு’ வாங்கக் காத்து இருந்த மதுப் பிரியர்கள் ; கோவையில் அரங்கேறிய விநோதக் கூத்து !!!

 தமிழக அரசின் அதிரடி உத்தரவால் கோவை ரயில் நிலையம் அருகே இருந்த டாஸ்மாக் (TASMAC) கடை மூடப்பட்ட விபரம் தெரியாமல், இன்று காலை ஏராளமான மதுப் பிரியர்கள் கடை எப்போது திறக்கும் என ஆவலோடு காத்து இருந்த காட்சிகள் அரங்கேறி உள்ளன. 

அதேசமயம், கடை நிரந்தரமாக மூடப்பட்டதால் அப்பகுதி வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

​பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருக்கும் 717 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் சில அதிரடி உத்தரவு பிறப்பித்து இருந்தார். 

அந்த உத்தரவின் அடிப்படையில், கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 69 டாஸ்மாக் கடைகளை மூடும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை ரயில் நிலையம் அருகே எப்போதும் கூட்டமாக காட்சி அளிக்கும் ஒரு டாஸ்மாக் கடை நேற்று இரவுடன் அதிரடியாகப் பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஆனால், இந்த விபரம் தெரியாத ஏராளமான மதுப்பிரியர்கள், இன்று காலை வழக்கம் போல் ‘சரக்கு’ வாங்குவதற்காகக் கடையின் முன்பாகக் குவியத் தொடங்கினர். நீண்ட நேரமாகியும் கடை திறக்கப்படாததால், "எப்பப்பா கடையைத் திறப்பீங்க ?" என்று அங்கு இருந்தவர்களிடம் அவர்கள் அப்பாவியாகக் கேட்டு காத்துக் கிடந்தனர்.

டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்பட்டு விட்டதை அங்கு இருந்தவர்கள் எடுத்துக் கூறிய பிறகே, மதுப்பிரியர்கள் ஏமாற்றத்துடன் ‘அப்செட்’ ஆகி அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

​அதே நேரத்தில், இந்த டாஸ்மாக் கடையால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த அருகில் இருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், கடையை மூடிய தமிழக அரசுக்குக் நன்றி தெரிவித்துக் கொண்டனர். 

இது குறித்து அப்பகுதி வியாபாரிகள் கூறுகையில்,

 "இந்தக் கடையால் தினமும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலும் இருந்து வந்தது. தற்போது கடை மூடப்பட்டு உள்ளது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை அளித்து உள்ளது. எக்காரணத்தைக் கொண்டும், மீண்டும் எந்தக் காலத்திலும் இந்த இடத்தில் டாஸ்மாக் கடையைத் திறக்கக் கூடாது" என அவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: