கோவையில் பட்டப் பகலில் பயங்கரம் ; பூட்டிய வீட்டை இரும்பு ஆயுதத்தால் உடைத்த மர்ம நபர் - செல்போன் வீடியோ காட்சிகள் வைரல் !!!
கோவை, உக்கடம் புல்லுக்காடு பகுதியில் அமைந்து உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் 26 கட்டிடங்களில் சுமார் 2000 குடியிருப்புகள் உள்ளன. அதில் பல வீடுகளில் ஆட்கள் இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டு இருப்பதாகவும் அங்கு அவ்வப் போது இளைஞர்கள் சிலர் வந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி வருவதாகவும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை 18 வது பிளாக் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் ஆறு மாதத்திற்கும் மேலாக பூட்டி இருந்த வீட்டின் பூட்டை மர்ம நபர் ஒருவர் ஏற்கனவே தான் கொண்டு வந்து இருந்த இரும்பு ஆயுதங்களால் உடைத்துக் கொண்டு இருந்தார். அப்போது அதனை கண்ட அருகில் வசித்து வரும் பொதுமக்கள் நீங்கள் யார் எதற்காக வீட்டின் பூட்டை உடைக்கிறீர்கள் என்று கேட்கவே அந்த நபர் தட்டிக்கேட்ட அக்கம், பக்கத்தினரையும் கடுமையாக பேசி தாக்க முற்பட்டு உள்ளார். இதற்கு இடையே அந்த நபர் வீட்டின் பூட்டை உடைப்பதை அங்கு இருந்தவர்கள் தங்களது கைப்பேசியில் வீடியோவாக பதிவு செய்த நிலையில் தற்பொழுது அந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் பல வீடுகள் கேரள மாநிலத்தில் வசித்து வருபவர்களுக்கு முறைகேடாக வழங்கப்பட்டு உள்ளதாகவும் பல்வேறு சமூக விரோத செயல்களுக்கான புகலிடமாக விளங்குவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்......

0 கருத்துகள்: