சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இளைஞருக்கு கொலை மிரட்டல்? - ஆட்சியரிடம் புகாரளித்த மனைவி !!!
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட கணவனை அவருடைய குடும்பத்தார் போதை மறுவாழ்வு இல்லத்தில் அடைத்து வைத்து துன்புறுத்தி வருவதாக மனைவி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளார்.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாருமதி. இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ் அகாடமியில் படித்துக்கொண்டு இருந்த போது, அங்கு வல்லநாடு அருகே உள்ள அகரம் வடக்கு பகுதியைச் சேர்ந்த மருதநாயகம் என்பவரும் படித்து உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பானது பின்னாளில் காதலாக மாறி இருக்கிறது. இருவரும் கடந்த ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்து உள்ளனர்.
இதற்கு இடையே மருதநாயகத்துக்கு பாளையங்கோட்டையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் வேலை கிடைத்து உள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் ஒப்புதல் தராத நிலையில், கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி தென்காசியில் உள்ள திருமலை கோயிலில் வைத்து திருமணம் செய்து உள்ளனர்.
மருதநாயகத்தின் பெற்றோர் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளாததால் இருவரும் பாளையங்கோட்டையில் உள்ள சாருமதியின் வீட்டில் வசித்து வந்து உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக மருதநாயகம் தனது சொந்த ஊரான வல்லநாடு அகரத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் சாருமதியின் வீட்டிற்கு திரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது.
கடந்த 24 ஆம் தேதி தனது மனைவி சாருமதிக்கு போன் செய்த மருதநாயகம், தனது தந்தை மற்றும் உறவினர்கள் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தன்னை மீட்கும் படியும் கூறியுள்ளார். இதனைக் கேட்ட சாருமதி, உடனடியாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் பாளையங்கோட்டை துணை ஆணையர் அலுவலகம், முறப்பநாடு காவல் நிலையம் ஆகிய இடங்களில் புகார் அளித்து உள்ளார்.
இருப்பினும் காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தாமல், முதல் தகவல் அறிக்கையையும் பதிவு செய்யாமல் புகாரளித்த சாருமதியை மிரட்டும் தொனியில் பேசி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து நெல்லை சரக டி.ஐ.ஜி அலுவலகத்தில் சாருமதி புகார் அளித்ததன்பேரில், விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது. மருதநாயகத்தை தூத்துக்குடியில் உள்ள போதை மறுவாழ்வு இல்லமான நிஷா பவுண்டேஷனில் அடைத்து வைத்து இருப்பதாக கூறி முறப்பநாடு காவல்துறையினர் அங்கு அவரை அழைத்துச் சென்று காண்பித்து உள்ளனர். ஆனால் அவரிடம் பேச அனுமதி மறுத்து உள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சாருமதி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து, எந்தவித போதைப் பழக்கமும் இல்லாத தனது கணவரை போதை மறுவாழ்வு மையத்தில் அடைத்து வைத்து துன்புறுத்துவதாகவும், அவரை ஆணவ கொலை செய்துவிடுவோம் என அவரது உறவினர்கள் மிரட்டுவதால் அவரை உடனடியாக மீட்டு தர வேண்டும் என்றும் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தார்.
காதலித்து திருமணம் செய்து கொண்ட இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த கணவன் - மனைவியை பிரிக்கும் முயற்சியில் கணவனின் உறவினர்கள் ஈடுபட்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்: