அண்ணா பாணியில் முதலமைச்சர் விஜய் - வைகோ பெருமிதம் !!!
அண்ணா முதலமைச்சரானதும் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்ததுப் போன்று தற்போது முதலமைச்சர் விஜய்யும் சந்தித்து உள்ளார் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பெருமிதம் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்று உள்ள விஜய், இன்று (மே 11) காலை 09.30 மணிக்கு கூடிய 17-வது தமிழ்நாடு சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து பெரம்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ வாக அவர் பதவியேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து அமைச்சர்கள், உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
இதை அடுத்து, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் தி.மு.க தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த முதலமைச்சர் விஜய், பூங்கொத்து கொடுத்து வாழ்த்துப் பெற்றார். பின்னர் மு.க.ஸ்டாலினுடன் கலந்துரையாடினார். அதன் தொடர்ச்சியாக, வைகோவின் இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்யை, வீட்டு வாசலில் நின்று ம.தி.மு.க வின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ எம்.பி., வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
தொடர்ந்து வைகோவுக்கு பூங்கொத்து வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் வாழ்த்துப் பெற்ற முதலமைச்சர் விஜய், அவரது குடும்ப உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது வைகோ வீட்டில் இருந்த பெண் ஒருவர், முதலமைச்சர் விஜய்யைப் பார்த்த மகிழ்ச்சியில், விஜய்யின் முகத்தைச் சுற்றித் திருஷ்டி கழித்தார். பதிலுக்கு முதலமைச்சரும் அந்த பெண்ணை நோக்கி அதையே செய்தார்.
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ம.தி.மு.க நிர்வாகிகளை வைகோ, முதலமைச்சர் விஜய்க்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர், முதலமைச்சர் விஜய்யின் கையைப் பிடித்துக் கொண்டு வீட்டில் இருந்து உற்சாகமாக வெளியே வந்த வைகோ, வெளியில் இருந்த ம.தி.மு.க, த.வெ.க தொண்டர்கள் மத்தியில் சிறிது நேரம் கையசைத்தார். பின்னர் முதலமைச்சர் கார் வரைச் சென்று வழியனுப்பி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, "விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மிகப்பெரும் சக்தியாக உருவாகி இருக்கிறார். தேர்தல் முடிவுகளில் அதிசயங்களும், ஆச்சரியங்களும் நடைபெறும் என 2 நாட்களுக்கு முன்னதாக தெரிவித்தேன். அது மெய்பிக்கப்பட்டு விட்டது. ம.தி.மு.க வில் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் தான் உள்ளோம். ஆனால் விஜய் சந்திப்பது தமிழ்நாட்டில் ஆரோக்கியமான அரசியல் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதற்கான சரியான சமிக்ஞையாகப் பார்க்கிறேன்.
மக்கள் மாற்றத்தை விரும்புவதற்கான அடையாளத்திற்கான தேர்தல். சமூகநீதி, மதச்சார்பின்மையைத் தொடர்வீர்கள் என எதிர்ப்பார்க்கிறேன் என தெரிவித்தேன். அவரின் உயர்ந்த பண்பாட்டிற்கு நன்றியையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி உள்ளோம்.
விஜய்யின் பண்பாடு என்னை வியக்க வைத்தது. என்னை சந்தித்த அவர் உங்கள் பேச்சுக்கு நான் ரசிகன் என கூறினார். நான் விஜய்க்கு அறிவுரை கூறவில்லை. வாழ்த்து கூறினேன். தமிழ்நாட்டில் பா.ஜ.க தூக்கி எறியப்பட்டு விட்டது. அண்ணா பாணியில் விஜய் செயல்படுகிறார். 1967-ல் தி.மு.க வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த போது அண்ணா அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்தார். தற்போது அதே பாணியில் முதலமைச்சர் விஜய் செயல்படுகிறார்.
தமிழ் தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும். அதன் பின்னர் தேசிய கீதம் பாடப்பட வேண்டும். ஆனால் இதற்கு முன்னர் ஒரு நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடப்பட்டு, அதன் பின்னர் தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டப் போது அந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலைமை மாற வேண்டும். தமிழ்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்பது எங்கள் விரும்பம்" எனத் தெரிவித்தார்.

0 கருத்துகள்: