திங்கள், 11 மே, 2026

நம்பிக்கை வாக்கெடுப்பில் யாருக்கு ஆதரவு ? பிரேமலதா பேட்டி !!!

SHARE

 நம்பிக்கை வாக்கெடுப்பில் யாருக்கு ஆதரவு ? பிரேமலதா பதில் !!!

பெரும்பான்மை நிரூபிக்கும் வாக்கெடுப்பில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கே வாக்களிப்பேன் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

2026 சட்டமன்ற தேர்தல் முடிந்து உள்ள சூழலில், இன்று தமிழ்நாட்டின் 17-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் எம்.எல்.ஏ க்களாக பதவியேற்று கொண்டனர். அந்த வகையில், விருதாச்சலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, பிரேமலதா விஜயகாந்த்தும் எம்.எல்.ஏ வாக பதவியேற்று கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, 

“இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று இருக்கிறேன். முதலில் எங்கள் அன்புத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், என்னை வெற்றி பெறச் செய்த விருதாச்சலம் தொகுதி மக்களுக்கும், எங்கள் கூட்டணி தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அனைத்து தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

விருதாச்சலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற இந்த தருணம் எங்கள் அன்புத் தலைவர் கேப்டனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று, என் தாயகமான விருதாச்சலம் தொகுதிக்கு நான் அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றி, உண்மையான மக்கள் பிரதிநிதியாக செயல்படுவேன் என்று உறுதி அளித்து உள்ளேன். அந்த வகையில், மக்களுக்கான பணிகளை சிறப்பாக மேற்கொள்வேன்” என்றார்.

மேலும் பேசிய அவர், “நான் சார்ந்து உள்ள மதச்சார்பற்ற வெற்றி கூட்டணி சார்பாகவே சட்டமன்றத்தில் எனது குரலும், வாக்கும் பதிவு செய்யப்படும். அந்த கூட்டணியின் நம்பிக்கையையும், கொள்கைகளையும் முன்னிறுத்தி செயல்படுவேன்” என திட்டவட்டமாக தெரிவித்தார். இதன் மூலம் த.வெ.க விற்கு ஆதரவு கிடையாது என்பதை அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.

தொடர்ந்து, தமிழக முதலமைச்சராக பதவியேற்று உள்ள விஜய்யின் முதல் 3 கையெழுத்துகள் தொடர்பான கேள்விக்கு, “முதலமைச்சராக பதவியேற்று உள்ள அன்பு தம்பி விஜய்க்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவர் நேற்று தான் பதவியேற்று உள்ளார். இன்னும் கொஞ்சம் அவகாசம் தருவோம். அதன்பிறகு, தமிழக நலனுக்காக குரல் கொடுப்போம்” என்றார்.

அதேபோல், தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்து உள்ளது. ஐந்தாண்டுகள் தொடருமா என்ற கேள்விக்கு, “நாளை என்ன நடக்கும் என்று யாராலும் இன்றே கணிக்க முடியாது. பொறுத்து இருந்து பார்ப்போம்” என சூசகமாக பதிலளித்தார் பிரேமலதா.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: