விஜய் முதலமைச்சரானதில் எனக்கு பொறாமையா? ரஜினிகாந்த் விளக்கம் !!!
விஜய் முதலமைச்சரானதில் தனக்கு பொறாமை கிடையாது எனவும், இருபெரும் கட்சிகள் சேர நான் பேசியதாக கூறப்படும் அளவு தான் தரம்கெட்டவன் இல்லை என்ற நடிகர் ரஜினிகாந்த் பேசி உள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான உடன் நடிகர் ரஜினிகாந்த், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சம்பவம் அரசியல் களத்தில் சலசலப்பு ஏற்படுத்தியது. மேலும், முதலமைச்சராக பதவியேற்ற விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவில்லை எனவும் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரில் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது,
“தேர்தல் முடிவுகள் வந்தவுடன் நான் முதலில் ஸ்டாலின் சாரை சந்தித்து பேசினேன். அதில் சில விமர்சனங்கள் வந்தன. ஸ்டாலின் சாரும் நானும் 38-40 கால நண்பர்கள். எங்களுடைய நட்பு என்பது கொள்கைகள், அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஜனநாயகத்தில் தோல்வி, வெற்றி என்பது சகஜம். ஸ்டாலின் அவர்கள் கொளத்தூரில் தோல்வி அடைந்தது, எனக்கு சங்கடமாக இருந்தது. அதற்காக ஒரு நண்பன் என்ற முறையில் சென்று சந்தித்தேன்.
அதற்கு நான் விஜய் முதலமைச்சர் ஆகக் கூடாது என அதை தடுக்கவே அங்கு சென்றேன் என்றும், வேறு எதோ இரண்டு அரசியல் கட்சிகளை சேர்க்கணும் என்று பேசுகிறார்கள் என விமர்சனங்கள் வருகிறது. அந்த சூழ்நிலையில் அப்படியெல்லாம் பேச முடியுமா ? அப்படி பேசும் ஒரு தரம் கெட்ட ஆள் ரஜினிகாந்த் இல்லை.
மற்றொன்று, விஜய்க்கு நான் வாழ்த்து சொல்லவில்லை என்று சொல்கிறார்கள். அவர் வெற்றி பெற்ற உடனே நான் சமூக வலைத்தளப் பக்கத்தில் என்னுடைய வாழ்த்துகளை பதிவிட்டேன். அதேபோன்று, விஜய் முதலமைச்சரானது குறித்து விமான நிலையத்தில் ஒருவர் கேட்டதற்கும் நான் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என விமர்சனம் எழுந்தது.
நான் வழக்கமாக விமான நிலையத்திற்கு செல்லும் போது செய்தியாளர்கள் இருக்கிறார்களா என கேட்டு விட்டு தான் செல்வேன். அன்று யாரும் இல்லையென்று சொன்னார்கள். அந்த நபர் செய்தியாளர் மாதிரி தெரியவில்லை. செல்போனை வைத்துக் கொண்டு என்னிடம் திடீரென கேள்வி கேட்டார். நான் அப்படியே பார்த்து சிரித்து விட்டு சென்று விட்டேன்.
அதற்கு, விஜய்யை பார்த்து நான் பொறாமை படுகிறேன் என சொல்கிறார்கள். நான் அரசியலில் இல்லாத போது அவர் மீது எனக்கு ஏன் பொறாமை. ஒருவேளை கமல்ஹாசன் முதலமைச்சராக வந்து இருந்தால், பொறாமை வந்திருக்குமோ இல்லையா ? என்று தெரியாது. அப்போது கூட வந்து இருக்காது.
கிடைக்கிறது கிடக்காம இருக்காது, கிடைக்காம இருக்கிறது கிடைக்காது'. எனக்கும் விஜய்க்கும் சுமார் 25 ஆண்டுகள் இடைவெளி இருக்கிறது. சின்ன வயதில் இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறேன். அவர் முதலமைச்சரானதில் எனக்கு என்ன பொறாமை அதுவும் இந்த சின்ன வயதில் முதலமைச்சராகி இருக்கிறார். அது எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் செய்ததை விட பெரியது.
இவ்வளவு பெரிய மத்திய அரசு, இங்கு இருக்கும் பெரிய கட்சிகளை தவிர்த்து வெற்றி பெற்று இருக்கிறார். இது பொறாமை அல்ல. ஆச்சரியம் களந்த சந்தோசம். விஜய் மீது மக்கள் மத்தியில் நிறைய எதிர்பார்ப்பு இருக்கும். மக்களுக்கு நிறைய நல்லது செய்ய வேண்டும். அவர் செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது” என கூறி விஜய் முதலமைச்சராக பதவியேற்றத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.
நீங்கள் அரசியலுக்கு வந்து இருந்தால் முதலமைச்சராகி இருக்கலாம். கால சூழ்நிலையினால் ஆக முடியவில்லை என வருத்ததுடன் என உங்களுடைய ரசிகர்கள் கூறுகிறார்கள் என்ற நிரூபரின் கேள்விக்கு,
“நான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று சொல்லி அறிக்கை வெளியிட்டு இருக்கிறேன். அரசியல் என்பது எளிதானது கிடையாது. மிகப்பெரிய பொறுப்பு. சினிமாவும் அரசியலும் வேறு, வேறு” என பதிலளித்தார். விஜய்க்கான அறிவுரை குறித்த கேள்விக்கு,
“எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஒரு இரண்டு வரும் அவரை விட்டு விட வேண்டும். அவர்களது தொண்டர்கள், ரசிகர்கள் ஏதாவது தப்பு செய்தால் அது விஜய்க்கு தான் பிரச்சனை என்பதை அவரது ரசிகர்கள் தெரித்து கொள்ள வேண்டும். சினிமா புகழ், இளைஞர்கள், மகளிர் மற்றும் சமூக வலைத்தளம் விஜய்க்கு கைக்கொடுத்து உள்ளது” என்றார். ஏன் முதலமைச்சர் பதவியேற்று விழாவில் கலந்துகொள்ளவில்லை என்ற கேள்விக்கு,
“மறைந்த கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்கும் போது கூட நான் போகவில்லை. நீங்கள் வருகிறீர்களா ?அல்லது நான் வரவா ? என அப்போது கலைஞர் சொன்னார். அப்போது நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு, சென்று பார்த்தேன்.
நீங்கள் அரசியலுக்கு வந்து இருந்தால் வெற்றி பெற்றி இருப்பீர்களா ?என்ற கேள்விக்கு,
“நூறு சதவீதம் வெற்றி பெற்றிருப்பேன். அதில் எந்த சந்தேகமும் கிடையாது” என பதிலளித்து, முதலமைச்சர் விஜய்க்கு மீண்டும் வாழ்த்து தெரிவித்தார்.

0 கருத்துகள்: