ஞாயிறு, 10 மே, 2026

புதிய உறுப்பினர்கள் நாளை எம்.எல்.ஏ க்களாக பதவியேற்பு !!!

SHARE

 புதிய உறுப்பினர்கள் நாளை எம்.எல்.ஏ க்களாக பதவியேற்பு !!!

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள புதிய உறுப்பினர்கள் எம்.எல்.ஏ க்களாக  நாளை பதவியேற்கின்றனர்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று (மே 10) நடந்த பதவியேற்பு விழாவில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பதவிப்பிரமாணமும், ரகசியகாப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து, என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், சி.டி.நிர்மல்குமார் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, சென்னை கிண்டி மக்கள் மாளிகையில் இன்று மாலை 04.00 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தற்காலிக சபாநாயகராக கருப்பையா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார்.

முதலமைச்சராக விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட விஜய்க்கு பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், பல்வேறு நாடுகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், புதிய எம்.எல்.ஏ க்களின் பதவியேற்பு நாளை (மே 11) நடைபெற உள்ளதாக சட்டப் பேரவையின் செயலாளர் சீனிவாசன் அறிவித்து உள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு சட்டப் பேரவையின் செயலாளர் சீனிவாசன் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நாளை (மே 11) காலை 09.30 மணிக்கு கூடுகிறது. இதில் புதிதாகத் தேர்வுச் செய்யப்பட்டு உள்ள உறுப்பினர்கள் எம்.எல்.ஏ க்களாகப் பதவியேற்றுக் கொள்கின்றனர். இவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

அதைத் தொடர்ந்து, நாளை மறுநாள் (மே 12) காலை 09.30 மணிக்கு சட்டப்பேரவையின் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோரைத் தேர்வுச் செய்வதற்கான தேர்தல் நடைபெறும். பதவியேற்க வரும் உறுப்பினர்கள், தங்களது வெற்றி சான்றிதழைக் கட்டாயம் கொண்டு வர வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வரும் மே 13- ஆம் தேதிக்குள் சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் விஜய்க்கு ஆளுநர் உத்தரவிட்டு உள்ள நிலையில், சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: