ஞாயிறு, 10 மே, 2026

வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் - அரசாணை வெளியிட்டு தமிழக அரசு விளக்கம் !!!

SHARE

 வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் - அரசாணை வெளியிட்டு தமிழக அரசு விளக்கம் !!!

2 மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரத்திற்கு மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கு ஏற்கெனவே இருந்த 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் தொடரும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

த.வெ.க தலைவர் விஜய், தமிழ்நாட்டின் புதிய முதல்வராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வருக்கு ஆளுநர் வி.ஆர்.அர்லேகர் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், த.வெ.க தேர்தல் அறிக்கையில் இடம் பெற்று உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 3 முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டார். குறிப்பாக, வீடுகளில் 2 மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்தார்.

தமிழகத்தில் 2.30 கோடிக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் உள்ளன. வீடுகளுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை மின்கணக்கீடு பணி நடக்கிறது. இந்நிலையில், 500 யூனிட்டிற்கு கீழ் பயன்படுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 100 யூனிட் இலவசம் என்று ஏற்கெனவே இருந்த திட்டம் தொடர்கிறது என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்டு உள்ள அரசாணையில், "தகுதி உள்ள அனைத்து வீட்டு மின் நுகர்வோருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்து உள்ளார். மக்களின் நிதி நெருக்கடியைக் குறைத்து, சாமானிய மக்களின் சுமையைக் குறைக்க இந்த நடவடிக்கை உதவும்.

எனவே, வீடுகளில் 2 மாதங்களுக்கு 500 யூனிட்டுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்க அரசு இதன் மூலம் ஆணையிடுகிறது. இதனால், ஆண்டுக்கு ரூ.1,730 கோடி (ஆயிரத்து எழுநூற்று முப்பது கோடி ரூபாய்) கூடுதல் மின் கட்டண மானியத்தை அரசே ஏற்றுக் கொண்டது.

வீடுகளில் 2 மாதங்களுக்கு 500 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் உட்பட தற்போது நடைமுறையில் உள்ள மின் கட்டண சலுகை தொடர்ந்து அமலில் இருக்கும்" என்று தெரிவித்து உள்ளார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: