கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு உள்ளது - கே.பி.முனுசாமி !!!
அ.தி.மு.க வின் சட்ட விதிகளின்படி, கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களின் பதவிகளை பறிப்பதற்கு கட்சியின் பொதுச் செயலாளருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளதாக அ.தி.மு.க துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்து உள்ளார்.
சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில், கே.பி.முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
"தற்போது சில மாவட்டங்களில் பொதுச் செயலாளரின் பெயரை பயன்படுத்தி அ.தி.மு.க வினரிடம் சிலர் கடிதம் பெறுவதாக தகவல் கிடைத்து உள்ளது.
தலைமைக் கழகம் அறிவிக்காமல் அ.தி.மு.க நிர்வாகிகள், யாரிடமும் கடிதம் வழங்க வேண்டாம் என்று அ.தி.மு.க கட்சித் தலைமை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அ.தி.மு.க கட்சி தலைமை சார்பிலும், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பிலும் இதை தெரிவித்துக் கொள்கிறோம்.
தங்களை நீக்கியது செல்லாது என சி.வி.சண்முகம் கூறி இருக்கிறார். அ.தி.மு.க வின் சட்ட விதிகளின்படி கட்சியின் பொதுச் செயலாளருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
கட்சி சட்ட விதிகளின்படி கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்குவதற்கு பொதுச் செயலாளருக்கு அதிகாரம் உள்ளது. அதன் அடிப்படையில் தான் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களின் கட்சி பதவியை பொதுச் செயலாளர் பறித்து உள்ளார்.
சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் குறித்தும், அ.தி.மு.க பொதுச் செயலாளரின் உத்தரவுக்கு எதிராக செயல்பட்டவர்கள் குறித்தும் சபாநாயகரிடமும், ஆளுநரிடமும் கடிதம் வழங்கப்பட்டு உள்ளது" என்றார்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க 47 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் ஒரு அணி செயல்பட்டு வருகிறது.
இதை அடுத்து சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக அரசுக்கு அ.தி.மு.க வின் 25 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியில் 22 சட்டமன்ற உறுப்பினர்கள் த.வெ.க அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை மீறி, சி.வி.சண்முகம் அணியின் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதை அடுத்து, த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 பேரையும் மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனால் அ.தி.மு.க வின் உட்கட்சி பிரச்சனை மேலும் தீவிரம் அடைந்து உள்ளது.

0 கருத்துகள்: