வெள்ளி, 15 மே, 2026

அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு எங்களால் எந்த பாதிப்பும் வராது - சி.வி.சண்முகம் திட்டவட்டம் !!!

SHARE

 அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு எங்களால் எந்த பாதிப்பும் வராது - சி.வி.சண்முகம் திட்டவட்டம் !!!

அ.தி.மு.க தலைமை அலுவலகம், எங்களுக்கு கோயில் போன்றது; எங்களால் அ.தி.மு.க அலுவலகத்திற்கு ஒரு துரும்பளவு கூட பாதிப்பு வராது என அ.தி.மு.க எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் தெரிவித்து உள்ளார்.

அ.தி.மு.க வில் பிளவு ஏற்பட்டு உள்ள நிலையில், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான குழுவினர், அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனது அலுவலகத்தில் சி.வி. சண்முகம் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

அப்போது பேசிய அவர், "நாங்கள் அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்குச் செல்ல இருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி, அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதாக அறிகிறோம்.

இந்த ரத்தம், அ.தி.மு.க ரத்தம். சாதாரண ஆளாக இருந்த எங்களை சட்டமன்ற உறுப்பினராக , நாடாளுமன்ற உறுப்பினராக பதவி கொடுத்து அழகு பார்த்த இயக்கம், அ.தி.மு.க இயக்கம். எம்.ஜி.ஆர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கம் இது. அ.தி.மு.க தலைமை அலுவலகத்தை எங்கள் கோயிலாக நினைத்து கொண்டு இருக்கிறோம்.

எந்த நிலையிலும், எந்த சூழ்நிலையிலும், எந்த காரணத்திற்காகவும் எங்கள் கோயிலான எங்கள் தலைமை கழகத்திற்கு ஒரு தூசி கூட படவோ, எங்களால் சிறிதளவு பாதிப்பு ஏற்படவோ நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எந்த நிலையிலும், சூழ்நிலையிலும், எந்த காரணத்திற்காகவும் நாங்கள் அங்கே வர மாட்டோம்.

சட்டப்படி நாங்கள் அ.தி.மு.க வின் உண்மையான தொண்டர்கள் என்பதை நிரூபித்த பின்னரே அங்கு எங்கள் கால் பதியும். அதனால் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை, கவலைப்பட தேவையில்லை. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் எங்களின் உயிர் மீது தான் கால் வைக்க முடியும்.

அங்கு நாங்கள் கலகம் செய்ய இருப்பதாக வரும் தகவல் முற்றிலும் தவறானது. எங்களால் எந்தப் பிரச்சனையும் வராது" என்று திட்டவட்டமாக கூறினார்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க 47 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் ஒரு அணி செயல்பட்டு வருகிறது.

இதை அடுத்து சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றிக் கழகம் அரசுக்கு 144 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியில் 22 சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அதே நேரம், எடப்பாடி பழனிசாமியின் உத்தரவையும் மீறி, சி.வி.சண்முகம் தலைமையிலான அணியின் 25 சட்டமன்ற உறுப்பினர்களும் த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதை அடுத்து, த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 பேரையும் மாவட்ட செயலாளர்கள் பொறுப்புகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதனால் அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை மேலும் தீவிரம் அடைந்து உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு சி.வி.சண்முகம் அணியினர் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதை அடுத்து, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: