செவ்வாய், 12 மே, 2026

சட்டப் பேரவையில் அனைவரும் சமம் - முதலமைச்சர் விஜய் உறுதி !!!

SHARE

 சட்டப் பேரவையில் அனைவரும் சமம் - முதலமைச்சர் விஜய் உறுதி !!!

தமிழ்நாடு சட்டப் பேரவையில் அனைவரும் சமம் என்று முதலமைச்சர் விஜய் அனைத்து உறுப்பினர்களுக்கும் உறுதி அளித்து உள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தல் முடிந்து, மாநிலத்தின் 14-வது முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்று உள்ளார். 17 வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று (மே 11) நடைபெற்ற நிலையில், வெற்றி பெற்ற எம்.எல்.ஏ க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

நேற்று தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்பு பதவி பிரமாணம் நடைபெற்ற நிலையில், இன்று பேரவையின் சபாநாயகராக ஜே.சி.டி பிரபாகரும், துணை சபாநாயகராக எம்.ரவிசங்கரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அவர்களை வாழ்த்தி உரையாற்றினார் முதலமைச்சர் விஜய். அப்போது அவர், “மக்களே மக்களுக்காக மக்களால் நடத்தும் ஆட்சி மக்களாட்சி என்றார். அமெரிக்க முன்னாள் குடியரசு தலைவர் ஆபிரகாம் லிங்கன். இன்று மக்களாட்சியை அளித்து உள்ள மக்களின் எதிர்பார்ப்பை கொண்டு வந்து, அவற்றை செயல்படுத்துவதற்கான திட்டங்களையும், சட்டங்களையும் அமல்படுத்த வேண்டிய பொறுப்பு பேரவைக்கு உள்ளது.

இந்த ஆட்சிக் காலத்தில் நிறைய மக்கள் அதிக நன்மைகளை பெற்று உள்ளனர் என்கிற வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். இங்கு அனைவரும் சமம். ஓர் உறுப்பினரை கொண்ட கட்சிகள் இங்கே இடம் பெற்று இருந்தாலும், அவர்கள் கருத்துகளுக்கும், அதிக எண்ணிக்கை பெற்று உள்ள தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்களின் கருத்துகளுக்கும் சமமாகவே மதிப்பு அளிக்கப்பட்டு, நல்லவை ஏற்கப்பட்டு, அல்லவை நிராகரிக்கப்பட்டு ஜனநாயகத்தின் இதயமாகவும், மூளையாகவும் இப்பேரவை செயல்பட வேண்டும்.

அதற்குரிய வகையில், பெருமை வாய்ந்த வரலாற்று சிறப்பு கொண்ட இப்பேரவையை நடத்திச் செல்லும் பண்பை பெற்று உள்ளவரையே தமிழக வெற்றிக் கழகம் முன்மொழிந்து உங்களை ஆசனத்தில் அமர்த்தி இருக்கிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், தாங்கள் பேரவை தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளீர்கள். பேரவை முன்னவரும், எதிர்க்கட்சி தலைவரும் தங்களுடைய கரங்களை பிடித்து அழைத்துச் சென்று அமர வைத்தார்கள் என்று கூறியதோடு, இதற்கான பின்னணி குறித்தும் பேரவையில் எடுத்துரைத்தார்.

அவர் பேசுகையில், “இங்கிலாந்து நாடாளுமன்ற நடைமுறைகளை போன்றே நமது நாட்டிலும் நாடாளுமன்ற நடைமுறைகள் இருக்கின்றன. அந்த காலத்தில் மன்னர் ஆட்சியின் போதே அங்கு அனைத்து அதிகாரங்களையும் பெற்ற மன்னரும் இருந்தார். நாடாளுமன்றமும் இயங்கியது. அங்கு மன்னர் ஒரு பணியை செய்ய வேண்டுமென விரும்புவார். அதை நாடாளுமன்றம் பெரும்பாலும் நிராகரிக்கும். இதுகுறித்த தகவலை மன்னருக்கு சொல்ல வேண்டியவர் Speaker என்று சொல்லப்படும் நாடாளுமன்ற தலைவர்.

தான் கூறியதை நாடாளுமன்றம் நிறைவேற்றாத நிலையில், ஸ்பீக்கரின் தலையை துண்டிக்க பல முறை மன்னர் உத்தரவிட்டு உள்ளார். இது பலமுறை நடந்ததால் யாருமே இந்த Speaker பதவிக்கு வர விரும்ப மாட்டார்கள்.

எனவே புதிதாக நாடாளுமன்றம் அமையும் போது, ஸ்பீக்கர் பதவி வேண்டாம் என அனைவரும் தலை தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிப்பர். அவை முன்னவரும், எதிர்க்கட்சி தலைவரும் அவரை தடுத்து நிறுத்தி, அவர் கைகளை பிடித்து இழுத்து வந்து ஆசனத்தில் அமர வைப்பார்கள்.

அந்த காலத்தில் இருந்து வந்த இந்த மரபானது ஜனநாயக முறை ஏற்பட்ட பிறகும் தொடர்கிறது. நிச்சயமாக தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் அனைவரும் சபாநாயகருக்கு உதவிகரமாக இருப்பார்கள் என்கிற வாக்குறுதியை அளிக்கிறேன். பேரவையின் மாண்பையும், கண்ணியத்தையும், பேரவை உறுப்பினர்களின் கண்ணியத்தையும் காக்க வேண்டிய பொறுப்பை சபாநாயகரிடம் கொடுத்து இருக்கிறார்கள்” என்று கூறி சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை ஊக்குவித்தார்.

தற்காலிக சபாநாயகர் குறித்து பேசிய முதலமைச்சர், “தற்காலிக பேரவை தலைவர் பொறுப்பில் மிக சிறப்பாக பணியாற்றிய மு.வி கருப்பையாவை சந்திக்க நேற்று சென்று இருந்தேன். அங்கு பேரவையின் முன்னாள் தலைவர்களுடைய புகைப்படங்கள் வைக்கப்பட்டு இருந்தன. அவர்களை பற்றி அறிந்த போது பெருமிதமாக இருந்தது.

ஏனென்றால் எடுத்துக்காட்டாக விளங்கும் ஜே. சிவசண்முகம் பிள்ளை, டாக்டர் யு. கிருஷ்ணராவ், எஸ். செல்லபாண்டியன் வரிசையில் மிக சரியான ஒருவரையே நாம் முன்மொழிந்து உள்ளோம். அதே போன்று தான் பேரவை துணைத் தலைவரும் இருக்கிறார். இருவருமே மிக சாதாரண குடும்பத்தில் பிறந்து மக்கள் பணியாற்ற வேண்டுமென்ற அவாவில் செயல்பட்டு வந்தவர்கள்.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்

எனும் வள்ளுவனின் வாய்மொழிக்கேற்ப சட்டமன்ற நடவடிக்கைகள் சீராக, செம்மையாக, அமைதியாக நடைபெறும் வகையிலும், ஜனநாயக நெறிமுறைகள் பேணி பாதுகாக்கப்படும் வகையிலும், இந்த அவைக்கு பேரவை தலைவரும், துணைத்தலைவரும் பெருமை சேர்ப்பீர்கள் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு.

அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதர்களை மதிக்கும் நல்ல பண்புகள் நிலைநாட்டப்பட வேண்டும். தமிழ் பண்பாடு போற்றப்பட வேண்டும். அவையும் மரபும், மாட்சிமையும், மதிப்பும் காக்கப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் பதவியேற்று இருக்கும் சபாநாயகர், துணை சபாநாயகர் இருவராலும் அவை காப்பாற்றப்படும் என நம்பிக்கை தெரிவிக்கிறேன்” என்று வாழ்த்தி உரையை முடித்தார்.
SHARE

Author: verified_user

0 கருத்துகள்: