செவ்வாய், 12 மே, 2026

மக்களை பிளவுபடுத்தும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் !!!

SHARE

 மக்களை பிளவுபடுத்தும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் !!!

சனாதனம் மக்களை பிளவுபடுத்துகிறது என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் குற்றம்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதனை ஒழிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார்.

17 ஆவது சட்டப் பேரவையின் எதிர்கட்சி தலைவராக தன்னுடைய முதல் உரையை உதயநிதி ஸ்டாலின் இன்று (மே 12) ஆற்றினார். அப்போது அவர், "என்னை தேர்ந்தெடுத்த சேப்பாக்கம் தொகுதி மக்களுக்கும், தி.மு.க கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கும், கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் நன்றி.

இன்று புதிதாக தேர்வு செய்யப்பட்டு உள்ள சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோருக்கு எங்களின் வாழ்த்துகள். பேரவை தலைவர் சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர் என்பதை நான் அறிவேன். பேரவை விதிகள் உங்களுக்கு புதிது அல்ல. எதிர்கட்சியினரையும் அரவணைத்து செயல்படும் தலைவராக நீங்கள் பொறுப்பேற்று உள்ளீர்கள். இந்த பொறுப்பில் நடுநிலையுடன் செயல்படுவீர்கள் என நம்புகின்றோம்.

சட்டப் பேரவையில் தி.மு.க எதிரி கட்சியாக இல்லாமல், நல்ல எதிர் கட்சியாக செயல்படும். தி.மு.க எப்போதுமே ஆக்க சக்தி தான். எதிர் எதிரே அமர்ந்து இருந்தாலும் தமிழக மக்கள் நலனில் ஒரே வரிசையில் நாம் இருக்க வேண்டும். பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமான அவையாக தமிழக பேரவை இருக்க வேண்டும். புதிய அரசு, வாக்களிக்காத மக்களுக்குமான அரசாக செயல்பட வேண்டும்.

முதலமைச்சரும், நானும் ஒரே கல்லூரியில் படித்து இருந்தாலும் அரிசியலில் நாங்கள் தான் உங்களுக்கு சீனியர். எங்களுடைய அரசியல் அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ள தயாராக இருக்கிறோம்" என்றார். அப்போது முதலமைச்சர் விஜய் புன்னகையை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "இந்த முறை அவையில் ஆளும் கட்சி வரிசைக்கு சமமாக எதிர் கட்சிகள் வரிசை உள்ளது.

பதவியேற்பு விழாவில் தமிழ்தாய் வாழ்த்து 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. பா.ஜ.க ஆளும் மேற்கு வங்கம் மாநிலத்தில் வந்தே மாதரம் பாடப்படவில்லை. விரைவில் ஆளுநர் உரை நடைபெற உள்ளது. அப்போது மீண்டும் இந்த தவறு நடைபெற அனுமதிக்க வேண்டாம், நாங்கள் அனுமதிக்கவும் மாட்டோம்.

சட்டமன்றத்தில் மட்டுமல்லாமல், எந்தவொரு அரசு விழாவிலும் அல்லது தமிழ்நாட்டில் நடைபெறும் எந்தவொரு நிகழ்விலும், தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எப்போதும் முதன்மையான இடமே அளிக்கப்பட வேண்டும்.

இந்த நடைமுறையில் ஒரு போதும் சமரசத்திற்கு உள்ளாகாமல் இருப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நமது உரிமைகளையும் மரபுகளையும் பாதுகாப்பதில் நாம் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

இந்த மரபு மீறல், மாநில மக்கள் மத்தியில் மிகுந்த கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தார். காளைகளுக்கு மூக்கணாங்கயிறு, வாகனங்களுக்கு பிரேக் எப்படியோ ஆளும் கட்சிக்கு எதிர்க்கட்சியும் அப்படி தான். நாங்கள் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம்.

அதிகப்படியானோர் முதல் முறை எம்.எல்.ஏ வாக வந்து இருக்கிறீர்கள், பெண் உறுப்பினர்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளீர்கள். அவர்களுக்கு வாழ்த்துகள். எல்லோருக்கும் எல்லாம் உறுதி செய்யும் வகையில் நாங்கள் செயல்படுவோம்" என்று கூறினார்.


மேலும், மக்களைப் பிளவுபடுத்தும் சனாதனம் நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று சட்டப் பேரவையில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார். கடந்த 2023-ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் இதே போன்ற கருத்துக்களை வெளியிட்ட போது அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக இந்து அமைப்புகளின் கடும் விமர்சனங்களையும், சட்ட ரீதியான வழக்குகளையும் அவர் எதிர்கொண்டார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: