தி.மு.க தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன் - மு.க.ஸ்டாலின் !!!
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தோல்விக்கு கட்சி தலைவர் என்ற முறையில் தானே பொறுப்பேற்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடந்த இக்கூட்டத்தில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணம் குறித்து மு.க ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தத்தினார்.
இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க வின் முதன்மை செயலாளர் கே.என் நேரு, தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழி உள்ளிட்ட திமுக மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ஸ்டாலின், “நடந்து முடிந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. தற்போது அமைந்து உள்ள அரசும் நமது கூட்டணிக் கட்சியின் தயவால் தான் அமைந்து உள்ளது. தி.மு.க வுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லையே தவிர கணிசமான எண்ணிக்கையில் வாக்குகள் கிடைத்து உள்ளது.
வரலாற்றை திரும்பிப் பார்த்தால், 1989-ல் தி.மு.க ஆட்சி அமைத்தது. அடுத்து 1991 தேர்தலில் வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே ஜெயிச்சோம். 96-ல் மீண்டும் நம்ம ஆட்சி. ஆனால், 2001 தேர்தலில் 37 இடங்களில் மட்டுமே வென்றோம். பிறகு 2006-ல் தி.மு.க ஆட்சி, 2011-ல் வெறும் 31 இடங்கள். இப்படி ஆட்சியில் இருந்து தோற்ற போதெல்லாம், மிகக் குறைந்த இடங்களிலேயே வெற்றி பெற்றோம்.
2021 வெற்றிக்குப் பிறகு, 2026-ல் 59 இடங்களில் வென்று இருக்கிறோம். கூட்டணியோடு சேர்த்து 73 இடங்கள். நமக்கும் த.வெ.க வுக்குமான வாக்கு வேறுபாடு 3.52 விழுக்காடு தான். தற்போது சமூக வலைத்தளத்தில், 'எப்படியும் தி.மு.க தான் ஜெயிக்கும்ன்னு நினைத்தோம். அதனால், என்னுடைய ஒரு ஓட்டுல என்னாகிடும்னு தெரியாம போட்டுவிட்டோம்' என பொதுமக்கள் புலம்புகிறார்கள்.
அதுமட்டுமல்ல, 'இப்படி ஒரு கட்சிக்கு ஓட்டுப் போட்டு, ஆட்சியில் அமர வைத்து விட்டோமே' என பலரும் பதிவிடுவதை பார்க்க முடிகிறது. இதுதான் நம் ஐந்தாண்டுக் கால நல்லாட்சிக்கு கிடைத்த அங்கீகாரம். பொது வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பது சகஜம். அதைத்தான் அண்ணாவும், கலைஞரும் நமக்கு கத்து தந்து இருக்க பக்குவம்.
என்னைப் பொறுத்தவரை, கடந்த 5 ஆண்டும் என் சக்திக்கு மீறி கடுமையாக உழைத்தோம். உங்களையும் ஓய்வில்லாமல் உழைக்க வைத்தேன். இதுவரை எந்த அரசும் செய்யாத சாதனைகளை நாம் செய்தோம். இருந்தாலும், நம்மால் ஆட்சி அமைக்க முடியவில்லை. அதற்காக, நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. தோல்விக்கான காரணங்களாக ஒருவர் இன்னொருத்தரைக் குற்றம் சொல்வது, அவர் இன்னொருத்தரை கை காட்டுவது. இப்படி மாற்றி மாற்றி குற்றம் சொல்லிக் கொண்டே இருந்தால், இதற்கு ஒரு முடிவே இருக்காது.
அப்படியானால், தோல்விக்கு யார் தான் பொறுப்பு ? யாரும் யாரையும் குறை சொல்ல வேண்டாம். கட்சித் தலைவர் என்ற முறையில், தி.மு.க தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன். இதுதான் நிதர்சனம். வெற்றி கிடைத்தால் பெருமையை ஏற்றுக்கொள்ளும் நான், தோல்விக்கான பொறுப்பையும் ஏற்பதில் தவறில்லை. அதுதான் நியாயம். அதேபோல, தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்வது அவசியம். ஆனால், அது அடுத்தவர் மீதான அவதூறாக இருக்கக் கூடாது.
இத்தேர்தலில் நடந்து இருப்பது, புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி. சுனாமினா சாதனையோ, சாகசமோ கிடையாது. தமிழ்நாட்டின் நலனைப் பாதித்து உள்ள சுனாமி பேரழிவு இது. மக்களை இதில் இருந்து எப்படி மீட்டெடுக்க போகிறோம் என்பதை பற்றி சிந்திக்க வேண்டும்.
ஒவ்வொரு தொகுதிக்கும் தனிப்பட்ட பல பிரச்சனைகள் உள்ளது. அனைத்தையும் பரிசீலனை செய்து, ஆய்வு செய்ய வேண்டும். இது ஒரு தேர்தல் சுழல்தாவே தவிர, எந்திரிக்கவே முடியாத தோல்வி இல்லை. இனி கூடுதல் கவனத்தோடு வேலை செய்ய வேண்டும். முக்கியமாக, ஒற்றுமையாக இருந்து வேலை பார்க்க வேண்டும்.
அதற்கு முன், நம்மை நாமே சுய பரிசோதனை செய்ய வேண்டும். முதலில் தோல்விக்கான காரணங்கள் குறித்து தொகுதிவாரியாக, அனைத்து நிர்வாகிகளிடமும் கருத்துக் கேட்க வேண்டும். அதற்காக, கட்சி சார்பில் ஒரு குழு அமைக்க உள்ளேன். அவர்கள் அடுத்த 20 நாட்களில் எனக்கு அறிக்கை கொடுப்பார்கள். மேலும், கட்சி உறுப்பினர்கள் வெளிப்படையாக தகவலை பகிர, தனி ‘வெப்சைட்’ நாளைக்கே அறிவிக்கப்படும்.
அதில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, தி.மு.க அமைப்பு முறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர உள்ளேன். அது நமது கட்சியை இன்னும் ஒரு நூறாண்டுகளுக்கு உயிர்ப்போடு வைத்து இருக்க போகிறது” என்றார்.
டீக்கடையில் அமைந்து பேசிக் கொண்டு இருந்த நமது அரசியலை, சமூக வலைத்தளத்தில் பேசியாக வேண்டும். கடந்த ஐந்தாண்டில் நாம் உருவாக்கிய திட்டங்கள் எல்லாம் தொடர வேண்டும். சட்டப்பேரவையில் திறமையான கட்சியாக செயல்பட வேண்டும். வெற்றியோ, தோல்வியோ வாக்காளர்களை சந்தித்து நன்றி சொல்ல வேண்டும். நமக்கு உள்ளேயே ஒற்றுமை இல்லையென்றால், வெற்றி என்பது சாத்தியமில்லை.
அதேபோல, மாவட்ட செயலாளர்கள் தான் மாவட்டத்திற்கு முக்கியம். அதற்காக, அவர்கள் மட்டுமே முக்கியம்னு கிடையாது. கட்சியில் உள்ள எல்லா தூணும் முக்கியம். ஒருவேளை யாராவது, என்னால செயல்பட முடியாதுன்னு நினைச்சா, மனப் பூர்வமாக முன்வந்து பொறுப்பில் இருந்து விலகிக்கலாம். அது தவறு இல்லை. உழைக்க தகுதியானவர்கள் எத்தனையோ பேர் உள்ளார்கள். அடுத்த தேர்தலில் கண்டிப்பாக வெற்று பெறவேண்டும். குறி வைத்து களப்பணியாற்றினால், நிச்சயம் வெற்றி பெறுவோம்” என நம்பிக்கை தெரிவித்தார்.

0 கருத்துகள்: