6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : சாக்லேட் கொடுத்து ஆசை காட்டிய வேன் டிரைவர் - கோவையில் கைது !!!
ஸ்கூல் மைதானத்தில் அரங்கேறிய அநாகரீகம்: "யாராவது சொன்னால் கொன்று விடுவேன்" என மிரட்டிய பள்ளி வாகன ஓட்டுநர் !!!
கோவை, பீளமேடு பகுதியில் வசித்து வரும் 6 வயது சிறுமிக்கு, அவர் பயிலும் பள்ளி வேன் ஓட்டுநரே பாலியல் வன்கொடுமை இழைத்த கொடூரச் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கணவரை இழந்த நிலையில், பிழைப்பிற்காகப் பெங்களூருவில் ஹோம் நர்சிங் வேலை பார்த்து வரும் சிறுமியின் தாய், தனது மகளைக் கோவையில் உள்ள தனது பெற்றோரிடம் விட்டுச் சென்று உள்ளார்.
இந்நிலையில், கோடை விடுமுறைக்காகச் சிறுமியைத் தன்னுடன் பெங்களூருவிற்கு அழைத்துச் சென்ற போது தான், அந்தச் பிஞ்சு உள்ளத்தைச் சிதைத்த பகீர் உண்மைகள் ஒவ்வொன்றாகத் தெரியவந்து உள்ளது.
சிறுமிக்குச் சிறுநீர் கழிக்கும் போது வலிப்பதாகக் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய், மகளைப் பரிசோதித்த போது அந்தப் பகுதியில் காயம் இருப்பதைக் கண்டு துடிதுடித்துப் போனார். இது குறித்துச் சிறுமியிடம் மெதுவாக விசாரித்த போது, அவர் முதலாம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்தே பள்ளி முடிந்ததும் மாலையில் வேன் ஓட்டுநர் கணேசன் என்பவர், பள்ளி மைதானத்தில் வைத்துத் தனக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கண்ணீருடன் தெரிவித்து உள்ளார். "யாரிடமாவது சொன்னால் உன்னைக் கொன்று விடுவேன்" என அந்தச் சிறுமியை மிரட்டியதோடு, சாக்லேட் கொடுத்து வாயடைக்க முயன்ற அந்த காமக் கொடூரனின் செயல் ஒட்டுமொத்தப் பெற்றோரையும் திடுக்கிட வைத்து உள்ளது.
பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, சிறுமியின் தாய் கோவை புலியகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், உடனடியாக பள்ளி வேன் ஓட்டுநர் கணேசனைக் கைது செய்தனர்.
அவர் மீது போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி வாகனங்களிலேயே குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்: