சோபா விவகாரம்; சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த திருமாவளவன் !!!
வி.சி.க அலுவலகத்துக்கு சோபா தேவைப்பட்டதால் அதனை ஆர்டர் செய்து இருந்தோம், அது பத்திரிகையாளர்கள் இருக்கும் போது டெலிவரி செய்யப்பட்டதாக சோபா சர்ச்சைக்கு திருமாவளவன் முற்றுப்புள்ளி வைத்தார்.
மறைந்த வி.சி.க பொருளாளர் முகமது யூசப் நினைவு நாளையொட்டி சென்னை அசோக் நகரில் உள்ள வி.சி.க தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள அவருடைய திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் வி.சி.க தலைவர் திருமாவளவன் எம்.பி மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, "மகளிர் உரிமை திட்டம் தொடரும் என முதலமைச்சர் கூறி உள்ளது மகிழ்ச்சியானது. அதை வரவு வைக்க வேண்டிய நாள் சற்று தள்ளி போயிருந்தாலும், கட்டாயம் அது வழங்கப்படும் என கூறி இருப்பதால், விரைவிலேயே அதை முதலமைச்சர் நடைமுறைப்படுத்துவார்.
எங்கள் அலுவலகத்துக்காக சோபாவை நாங்கள் ஏற்கெனவே ஆர்டர் செய்து இருந்தோம். அது வரும், நேரத்தில் பத்திரிக்கையாளர்கள் வந்து விட்டார்கள். உதயநிதி ஸ்டாலின், புஷ்பா படத்துடன் இணைத்து சட்டசபையில் பேசியது வி.சி.க-வை அல்ல. அ.தி.மு.க-வில் தற்போது உருவாகியுள்ள இரு அணி விவகாரத்தைச் சுட்டிக்காட்டியே அவர் பேசினார்.
என்னை முதலமைச்சர் ஆக்குவது குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தை நடந்தது பற்றி எனக்கு நேரடியாகத் தெரியாது. எனக்கு தெரிந்த நண்பர்கள் இது குறித்து பேச்சு நடந்ததாக என்னிடம் சொன்னார்கள். ஆனால், அங்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. இதற்காக த.வெ.க வுக்கு ஆதரவு தருவதில் எந்தக் காலதாமதமும் செய்யவில்லை. இடது சாரிகள், எடுக்கும் முடிவை வைத்து எங்கள் கட்சியில் கூட்டம் நடத்தி அதன் பின்னர் முடிவு எடுப்போம் என கூறி இருந்தோம்.
அதன்படி, தான் நாங்கள் கலந்தாய்வு செய்து முடிவெடுத்தோம். இணைய வழி நடைபெற்ற கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவில் இரண்டு விதமான கருத்துகள் வந்தன. அதன் பின்னர், என்னுடைய முடிவுக்கு கட்டுப்படுவோம் என கட்சி நிர்வாகிகள் கூறினார்கள்.
இதை அடுத்தே எங்களுடைய ஆதரவை அறிவித்தோம். ஆனால், எங்களை பிடிக்காத சிலர் நாங்கள் தலைமறைவாகி விட்டோம், எங்கோ சென்று விட்டோம் என அவதூறு பரப்பினார்கள். தி.மு.க கூட்டணியில் நான் இருப்பதால் என்னை முதல்வர் ஆக்க வேண்டி தி.மு.க வினர் பேசியிருப்பார்கள். அது தி.மு.க வின் உத்தியாக இருக்கலாம்" என்றார்.
தொடர்ந்து, தி.மு.க - அ.தி.மு.க வினர் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "இதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்" என்றார்.

0 கருத்துகள்: