திங்கள், 29 ஜூன், 2026

ஆவின் பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி” ; லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி அதிரடியாக ரத்து - ஜூலை 1 முதல் MRP விலையிலேயே விற்பனை கோவை ஆவின் நிர்வாகம் அறிவிப்பு !!!

SHARE

 ஆவின் பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி” ; லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி அதிரடியாக ரத்து - ஜூலை 1 முதல் MRP விலையிலேயே விற்பனை  கோவை ஆவின் நிர்வாகம் அறிவிப்பு !!!

​“இனி செயற்கை நுண்ணறிவு மென்பொருள் செயலி மூலம் தான் பால்”: முகவர்களுக்கான கமிஷன் தொகையிலும் சீர்திருத்தம் - கொங்கு நுகர்வோர்கள் மத்தியில் சலசலப்பு !!!

 "கோயம்புத்தூர் மாவட்ட ஆவின் பால் மாதாந்திர அட்டைதாரர்களின் பட்ஜெட்டை பதம் பார்க்கும் வகையில், லிட்டருக்கு வழங்கப்பட்டு வந்த 2 ரூபாய் தள்ளுபடி சலுகை ரத்து செய்யப்படுவதாகக் கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (Aavin) அறிவித்து உள்ளது. வரும் ஜூலை 1 ஆம் தேதி (01.07.2026) முதல் மாதாந்திர அட்டைதாரர்களுக்கும் அதிகபட்ச சில்லறை விலையான MRP விலையிலேயே ஆவின் பால் விற்பனை செய்யப்படும் என்ற இந்த அதிரடி செய்தி, கொங்கு நாட்டு இல்லத்தரசிகள் மத்தியில் பலத்த  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது."

​கோவை மாவட்டத்தில் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆவின் பால் முகவர்களுக்குத் தங்கு தடையின்றி பால் கிடைப்பதை உறுதி செய்யவும், விநியோக உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு மாற்றவும் இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுகின்றன.

​ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் :

 கோவை மாவட்டத்தில் ஆவின் பால் அட்டை வைத்து இருக்கும் நுகர்வோர்கள், ஒவ்வொரு மாதமும் 11 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதிக்குள் தங்களது மாதாந்திர அட்டைக்கான தொகையைக் கைப்பேசி செயலி (Mobile App) மூலமாகவே செலுத்திப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

 தற்போது மாதாந்திர பால் அட்டை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் தள்ளுபடி வழங்கப்பட்டு வருவது முற்றிலுமாக நிறுத்தம் செய்யப்படுகின்றது. இனி சில்லறை விலையிலேயே பால் விநியோகம் நடக்கும்.

​நுகர்வோர்களுக்கு மட்டுமின்றி, ஆவின் பால் முகவர்களுக்கான விநியோக முறையிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

 பால் முகவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த பால் தேவைப் பட்டியல் பாக்கெட் அடிப்படையில் கணக்கிடப்பட்டதற்குப் பதிலாக, இனி பெட்டி அடிப்படையில் மட்டுமே தேவைப் பட்டியல் வழங்கப்படும்.

 வரும் ஒன்றாம் தேதி முதல் முகவர்கள் தங்களுக்குச் சேர வேண்டிய கமிஷன் தொகையை நேரடியாகக் கழித்துக் கொண்டு, மீதிப் பணத்தை மட்டும் ஆவின் நிர்வாகத்திற்குச் செலுத்தும் முறை அமல்படுத்தப்படுகிறது.

​இந்த சீர்திருத்தத்தினாால் ஆவின் நிர்வாகத்தில் முறைகேடுகளைத் தடுக்கவும் விற்பனையைத் துல்லியமாக்கவும் அதிநவீன உள்கட்டமைப்பு புகுத்தப்பட்டு உள்ளது.

வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய விற்பனைப் பிரிவு மென்பொருள் செயலி மூலமாகவே முகவர்கள் தங்களது தினசரித் தேவைப் பட்டியலை உறுதி செய்ய வேண்டும் என ஆவின் நிர்வாகம் அதிரடியாக அறிவுறுத்தி உள்ளது.

கோவை ஆவின் அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு 2 ரூபாய் சலுகை ரத்து செய்யப்பட்டு MRP விலைக்கு பால் விற்கப்படும் என்ற இந்த  அறிவிப்பை அடுத்து மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. 

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: