கோவை நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு: நாய் துரத்தியதால் சுவரேறி குதித்த வடமாநில வாலிபர் தடுமாறி விழுந்து பலி!!!
சி.சி.டி.வி காட்சியை கைப்பற்றி ரேஸ்கோர்ஸ் போலீசார் தீவிர விசாரணை !!!
கோவை கோபாலபுரம் பகுதியில் மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் சனி மற்றும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என அடுத்தடுத்து இரண்டு நாட்கள் நீதிமன்றத்திற்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.
விடுமுறை முடிந்து இன்று காலை நீதிமன்ற வளாகத்தை திறப்பதற்காக ஊழியர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்தனர். அப்போது நீதிமன்றத்தின் பின்பக்க வாசல் உள்புறமாக வாலிபர் ஒருவர் சுயநினைவற்ற நிலையில் தரையில் கிடப்பதைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த மருத்துவக் குழுவினர், அந்த வாலிபரின் உடலை பரிசோதித்துப் பார்த்த போது, அவர் ஏற்கனவே பரிசோதனை இன்றி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வாலிபரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அங்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்ததா என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். இன்று அதிகாலை அந்த வாலிபர் கோபாலபுரம் வீதியில் நடந்து சென்ற போது, நாய் ஒன்று அவரை கடிக்க துரத்தி உள்ளது. இதனால் அலறியடித்துக்கொண்டு ஓடிய அந்த வாலிபர், நாயிடம் இருந்து தப்பிக்க நீதிமன்றத்தின் பின்பக்க காம்பவுண்ட் சுவரில் ஏறி உள்ளே குதித்து உள்ளார்.
உள்ளே குதித்த பிறகும் பயம் தீராமல் அவர் வேகமாக ஓடிய போது, இருட்டில் எதிர்பாராத விதமாக கால் தடுமாறி கீழே விழுந்து உள்ளார். இதில் அவரது நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.
உயிரிழந்த வாலிபரின் சட்டைப் பையை போலீசார் சோதித்துப் பார்த்தபோது, அதில் வெறும் 250 ரூபாய் பணம் மட்டுமே இருந்தது. அவரைப் பற்றிய அடையாள அட்டைகளோ அல்லது வேறு எந்த விவரங்களோ கிடைக்கவில்லை.
அவர் தோற்றத்தை வைத்துப் பார்க்கும் போது வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி என்பது மட்டும் தெரியவந்து உள்ளது. அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்? கோவையில் எங்கு தங்கி வேலை பார்த்து வந்தார்? என்பது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்: