புதன், 24 ஜூன், 2026

கோவை பா.ஜ.க அலுவலகத்தில் இன்னும் அகற்றப்படாத அண்ணாமலை புகைப்படம் !!!

SHARE

 கோவை பா.ஜ.க அலுவலகத்தில் இன்னும் அகற்றப்படாத அண்ணாமலை புகைப்படம் !!!

பா.ஜ.க வில் அண்ணாமலை விலகிய நிலையிலும், கோவை மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள பேனரில் அவரது புகைப்படம் இன்னும் அகற்றப்படாமல் இருப்பது பேசுபொருளாகி உள்ளது.

ஐ.பி.எஸ் அதிகாரியாக கர்நாடகாவில் பணி புரிந்து வந்த அண்ணாமலை, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கடந்த 2020 ஆம் ஆண்டு பா.ஜ.க வில் இணைந்தார்.

கட்சியில் இணைந்த ஒருசில மாதங்களிலேயே அவருக்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. அதன்படி, கடந்த 2021 முதல் 2025 வரை தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவி வகித்தார்.

பின்னர், தமிழக பா.ஜ.க தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை அடுத்து, கட்சியில் இருந்து அண்ணாமலை ஓரங்கட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகின. எனினும், இதுதொடர்பாக அண்ணாமலை எதுவும் கூறவில்லை.

இதை அடுத்து, நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலைக்கு சீட் வழங்கப்படும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவருக்கு சீட்டும் வழங்கப்படவில்லை. இதன் தொடர்ச்சியாக, கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் கூட அண்ணாமலை பங்கேற்காமல் தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், இம்மாத தொடக்கத்தில் பா.ஜ.க வில் இருந்து அண்ணாமலை அதிகாரப் பூர்வமாக விலகினார். தொடர்ந்து, 'We The Leaders' என்கிற பெயரில் அரசியல் இயக்கத்தையும் அவர் தொடங்கினார்.

மேலும், அடுத்தடுத்த தேர்தல்களில் தனது கட்சி போட்டியிடும் எனவும் அண்ணாமலை தெரிவித்தார். அவரது இயக்கத்தில் தற்போது வரை சுமார் 18 லட்சம் பேர் இணைந்து உள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, அண்ணாமலை கட்சியை விட்டு வெளியேறி 2 வாரங்களுக்கும் மேல் கடந்துவிட்ட போதிலும், கோவை மாவட்ட பா.ஜ.க அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ள பேனரில் அண்ணாமலையின் புகைப்படம் இன்னும் காட்சி அளிக்கிறது.

கட்சியில் இருந்து முழுமையாக விலகிய ஒரு முன்னாள் தலைவரின் புகைப்படம், கட்சியின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தில் தொடர்ந்து நீடிப்பது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

பேனர்களை மாற்றுவதில் உள்ளூர் கட்சி நிர்வாகிகள் மெத்தனம் காட்டுகிறார்களா ? அல்லது அண்ணாமலையின் ஆதரவாளர்கள் இன்னமும் கட்சியில் ஆதிக்கம் செலுத்துகிறார்களா ? என்கிற கேள்வி, அரசியல் விமர்சகர்களால் முன்வைக்கப்படுகிறது.

தற்போது வரை இதுகுறித்து பா.ஜ.க தரப்பில் எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. கட்சியில் புதிய கட்டமைப்பை உருவாக்கி வரும் பா.ஜ.க தலைமை, இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு பழைய பேனர்களை அகற்றுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்து உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: