டெல்லி புறப்பட்டு சென்றார் நயினார் நாகேந்திரன்; அண்ணாமலைக்காக பா.ஜ.க மாநிலத் தலைவர் பதவி பறிக்கப்படுகிறதா ?
பா.ஜ.க வில் இருந்து அண்ணாமலை விலக விருப்பம் தெரிவித்து உள்ளதாக கூறப்படும் நிலையில், அக்கட்சியின் தலைமை அழைத்ததன் பேரில் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு புறப்பட்டு உள்ளார்.
சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழ்நாடு அரசியலில் பல்வேறு பரபரப்பு நகர்வுகள் இருந்து வருகின்றன. குறிப்பாக சுமார் 50 ஆண்டுகால வரலாற்றை கொண்ட திராவிட கட்சிகளை வீழ்த்தி தமிழக வெற்றிக் கழகம் முதல் தேர்தலிலையே வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அ.தி.மு.க இரண்டாக பிளவுப்பட்டது என அடுத்தடுத்து பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன.
மேலும் அ.தி.மு.க தயவோடு எப்படியாவது தமிழகத்தில் வலுவான இடத்தை பிடிக்கலாம் என எதிர்பார்த்த பா.ஜ.க வுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. பா.ஜ.க அங்கம் வகித்த அ.தி.மு.க கூட்டணி படுதோல்வி அடைந்து 3-வது இடத்துக்கு சென்றது.
இதுபோன்ற சூழ்நிலையில் பா.ஜ.க வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பா.ஜ.க வில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பிக்க உள்ளதாக கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தகவல் வெளியாகி வந்தது.
இந்நிலையில், தற்போது டெல்லி சென்று உள்ள அண்ணாமலை பா.ஜ.க தேசியத் தலைவர் நிதின் நபினை சந்தித்து தனது விலகல் கடிதத்தை வழங்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அண்ணாமலை சந்தித்து தனது ராஜினாமா முடிவு தொடர்பாக விளக்கியதாகவும் தெரிகிறது.
அண்ணாமலையின் இந்த முடிவு பா.ஜ.க வின் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள சூழலில், பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை உடனடியாக டெல்லி வருமாறு பா.ஜ.க தலைமை இன்று அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியானது.
இதனை அடுத்து திருவனந்தபுரம் வழியாக நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு புறப்பட்டு சென்று உள்ளார்.
நயினார் நாகேந்திரன் பா.ஜ.க மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு கட்சி பெரிய அளவில் வளர்ச்சி பெறவில்லை என்பது தமிழக பா.ஜ.க வில் உள்ள சிலரின் கருத்தாக இருந்து வருகிறது. எனவே நயினார் நாகேந்திரனை மாற்ற பா.ஜ.க தேசிய தலைமை முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் நயினார் நாகேந்திரன் டெல்லி செல்லும் நிலையில் தமிழக பா.ஜ.க வில் சில அதிரடி முடிவுகளை எடுக்க பா.ஜ.க தலைமை திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு இடையே, அண்ணாமலையை சமாதானப்படுத்தும் நோக்கில் தமிழக பா.ஜ.க தலைவர் பதவியில் இருந்து நயினார் நாகேந்திரன் நீக்கப்பட்டு, மீண்டும் அண்ணாமலையை அந்த இடத்திற்கு கொண்டுவர அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்: