புதன், 3 ஜூன், 2026

அமித் ஷா, நிதின் நபின் உடன் அண்ணாமலை சந்திப்பு ; பா.ஜ.க வில் இருந்து விலக விருப்பம் !!!

SHARE

 அமித் ஷா, நிதின் நபின் உடன் அண்ணாமலை சந்திப்பு ; பா.ஜ.க வில் இருந்து விலக விருப்பம் !!!

கடந்த சில மாதங்களாகவே பா.ஜ.க மீது அதிருப்தியில் இருந்து வந்த அண்ணாமலை, பா.ஜ.க வில் இருந்து விலக கட்சி தலைமையிடம் விருப்பம் தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க வில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கப் போவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வந்தன. இதுகுறித்து இரண்டு நாட்களில் பேச இருப்பதாகவும் அண்ணாமலை மேற்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், பா.ஜ.க தலைமையிடம் பேசுவதற்காக நேற்று மாலை அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார். நேற்று காலை பா.ஜ.க தலைமை அலுவலகத்திற்கு வந்த அண்ணாமலை, கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபினை சந்தித்து பேசினார். அப்போது பா.ஜ.க வில் இருந்து விலகுவதற்கான கடித்தத்தை அண்ணாமலை வழங்கியதாக டெல்லி பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்த அதிகாரப் பூர்வ தகவலை பா.ஜ.க தேசிய தலைமையோ, அண்ணாமலையோ இதுவரை வெளியிடவில்லை.

நிதின் நபினின் சந்திப்பை தொடர்ந்து, கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷையும் அண்ணாமலை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின், சந்தோஷுடன் இணைந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் அண்ணாமலை சந்தித்து பேசினார். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டின் அரசியல் சூழல் குறித்த தனது கருத்துக்களை அமித் ஷா உடன் அவர் பகிர்ந்து கொண்டார்.

கட்சியில் இருந்து தாம் சுமூகமாக வெளியேற விரும்புவதாகவும், தமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் அப்போது அண்ணாமலை எடுத்துரைத்தாகவும் பா.ஜ.க டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு நாள் காத்து இருக்குமாறு பா.ஜ.க தலைமை அவரை அறிவுறுத்தி உள்ள நிலையில், அண்ணாமலை நாளை தமது இறுதி முடிவை அறிவிக்கக்கடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் இடையே, இன்று மாலை பிரதமர் மோடியை அண்ணாமலை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பா.ஜ.க வில் இருந்து அண்ணாமலை விலகி, விரைவில் புதிய கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அடுத்தடுத்த இந்த சந்திப்புக்கள் தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்று உள்ளன.

தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த நேரத்தில் அண்ணாமலை தி.மு.க ஆட்சியில் ஏற்பட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார். மேலும் 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தின் மூலம் மாநில முழுவதும் பா.ஜ.க தொண்டர்களை நேரடியாக சந்தித்து தனக்கான ஆதரவு வட்டத்தை உருவாக்கினார்.

இதற்கு இடையே தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி அமைந்ததை தொடர்ந்து மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டு, நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு தமிழக பா.ஜ.க வுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக தகவல் வெளியாகி வந்தன.

இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும் இந்த கூட்டணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. பா.ஜ.க ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.

இதனால் அதிருப்தியில் இருந்து வந்த அவர் விரைவில் பா.ஜ.க வில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்குவார் என கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தகவல் வெளியாகி இருந்தன. இந்நிலையில் நாளை மறுநாள் அண்ணாமலையின் பிறந்த நாள் என்பதால், அன்றைய தினம் தனது அரசியல் நிலைபாடு தொடர்பாக அண்ணாமலை முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: