திங்கள், 22 ஜூன், 2026

கோவை சிறையில் காவல்துறை அதிரடி சோதனை ; போதைப் பொருள்கள் புழக்கம் உள்ளதா என தீவிரத் தேடுதல் வேட்டை !!!

SHARE

 கோவை சிறையில் காவல்துறை அதிரடி சோதனை ; போதைப் பொருள்கள் புழக்கம் உள்ளதா என தீவிரத் தேடுதல் வேட்டை !!!


கோவை மத்திய சிறையில் போதை பொருட்கள் புழக்கம் தொடர்பாக போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

கோவையில் உள்ள மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 2,500 க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த கைதிகள் தங்குவதற்கு 30 க்கும் மேற்பட்ட பிளாக்குகள் உள்ளன. பெண்களுக்கு என தனி பிளக்குகள் இருக்கிறது.

இந்த சிறையில் இருக்கும் கைதிகளிடம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன் சிறையில் உள்ள அதிகாரிகளுக்கு தெரியாமல் கைதிகள் கூட்டம் கூடி ஆலோசனை நடத்தி சக கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளை தாக்குவதாகவும் புகார் எழுந்தது.

எனவே கோவை மத்திய சிறையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் கோவை மத்திய சிறையில் அதிரடி சோதனை செய்து நடவடிக்கை எடுக்க காவல் துறை ஆணையர் கண்ணன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதை அடுத்து கோவை மாநகர வடக்கு துணை கமிஷனர் தங்கதுரை தலைமையில் 4 உதவி கமிஷனர்கள், 10 இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 200 போலீசார் நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவை மத்திய சிறைக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மோப்ப நாய் உதவியுடனும் சோதனை நடத்தப்பட்டது.

கைதிகள் தங்கி இருக்கும் அறை, கைதிகள் வேலை செய்யும் தொழில் கூடம் உட்பட பல்வேறு பகுதிகளின் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது போதைப்பொருட்கள் மற்றும் கூர்மையான சில ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் போலீஸ் அதிகாரிகள் தரப்பில் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் கூறும் போது ;

கோவை மத்திய சிறையில் நடத்தப்பட்ட சோதனை வழக்கமானது தான். அடிக்கடி சோதனை செய்யும் போது கைதிகளுக்கு பயம் ஏற்படும், இதனால் அவர்கள் குற்ற செயலில் ஈடுபட மாட்டார்கள். இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும். நேற்று நடத்தப்பட்ட சோதனையில் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் கூறினர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: