வயநாடு போல விபத்தா ? கல் குவாரி வெடியா ?” கோவையில் மலையில் இருந்து உருண்ட ராட்சதப் பாறை : அச்சத்தில் அப்பகுதி கிராம மக்கள் !!!
கேரளாவின் வயநாடு நிலச்சரிவு போல ஏதேனும் இயற்கை பேரிடரா ? அல்லது கல் குவாரிகளுக்காக வைக்கப்பட்ட வெடியால் நேர்ந்த விபத்தா ? எனத் தெரியாமல், கோவை எட்டிமடை அருகே மலையில் இருந்து ராட்சதப் பாறை ஒன்று திடீரெனக் கீழே உருண்டு விழுந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் பீதியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கோவை, மதுக்கரை அடுத்த எட்டிமடை பகுதி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் ஏராளமான கிராமங்களும், விவசாய நிலங்களும் அமைந்து உள்ளன.
இந்நிலையில், மலையின் மேல் பகுதியில் இருந்து ஏதோ நிலநடுக்கம் ஏற்பட்டது போலப் பயங்கரமான சத்தம் கேட்டு உள்ளது.
சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து வெளியே பார்த்த மக்கள் மலையில் இருந்து பிரம்மாண்டமான ராட்சதப் பாறை ஒன்று அசுர வேகத்தில் உருண்டு கீழே விழுந்ததைக் கண்டு உறைந்து போயினர்.
நல்லவேளையாகப் பாறை உருண்டு வந்த பாதையில் வீடுகள் ஏதும் இல்லாததால், பெரும் உயிர்ச் சேதம் தப்பியது.
அண்டை மாநிலமான கேரளாவின் வயநாடு பகுதியில் அண்மையில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு மற்றும் மலைகள் சரிந்த கொடூர விபத்தின் வடுக்கள் இன்னும் மக்கள் மனதில் இருந்து நீங்கவில்லை.
கோவையிலும் கடந்த சில நாட்களாகத் தென்மேற்கு பருவமழை பரவலாகப் பெய்து வருவதால், தொடர் மழையின் காரணமாகப் பாறை சரிந்து விழுந்ததா ? அல்லது நிலச்சரிவு போன்ற இயற்கை விபத்தா ? என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
மறுபுறம், எட்டிமடை மற்றும் அதன் சுற்று வட்டார மலைப் பகுதிகளில் சட்டவிரோதமாகக் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுவதாகவும், கல் குவாரிகளில் அளவுக்கு அதிகமான வீரியம் கொண்ட வெடி மருந்துகளைப் பயன்படுத்திப் பாறைகளைத் தகர்ப்பதே இதற்குக் காரணம் என்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
“இந்தப் பகுதியில் தொடர்ந்து கனிம வளங்களைத் தோண்டுவதாலும், பாறைகளை வெடி வைத்துத் தகர்ப்பதாலும் மலையின் அடிவாரம் மற்றும் நிலத்தடிப் பகுதிகள் அடியோடு பலவீனமடைந்து வருகின்றன. அதன் விளைவாகவே, தற்போது இந்த ராட்சதப் பாறை அவிழ்ந்து கீழே உருண்டு வந்து உள்ளது. இது ஆரம்பக் கட்ட எச்சரிக்கை தான். அதிகாரிகள் இப்பொழுதே நடவடிக்கை எடுக்காவிட்டால், கிராமங்களுக்கு உள்ளேயே பாறைகள் புகுந்து பெரும் ஆபத்து ஏற்படும்” என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துகள்: