இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 'நம்பிக்கைக்குரிய நண்பர்கள்' - பிரதமர் மோடி பெருமிதம் !!!
இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் நம்பிக்கைக்குரிய நண்பர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.
இந்தோனேசியா சுற்றுப் பயணத்தை முடித்து கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது 3 நாடுகள் பயணத்தின் அடுத்த கட்டமாக நேற்று ஆஸ்திரேலியா வந்தடைந்தார். அவருக்கு ஆஸ்திரேலிய அரசு மற்றும் புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா - இந்தியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸை சந்தித்துப் பேசினார்.
இந்த உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மெல்போர்னில் நடைபெற்ற 'இந்தியா-ஆஸ்திரேலியா சிஇஓ மன்றம்' மற்றும் பொருளாதார மன்ற கூட்டத்தில் இரு தலைவர்களும் இணைந்து பங்கேற்றனர்.சி.இ.ஓ என அழைக்கப்படும் தொழிலதிபர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "தற்போது உலகம் ஒரு இக்கட்டான காலக்கட்டத்தை எதிர் கொண்டு வருகிறது. உலகெங்கும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற சூழல் நிலவுவதுடன், விநியோகத் தொடர் பாதிப்புகள் மற்றும் கடுமையான எரிசக்தி நெருக்கடிகள் ஏற்பட்டு உள்ளன. இத்தகைய சூழலில், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தங்களின் பலத்தை ஒன்றிணைத்து, நம்பிக்கைக்குரிய கூட்டாளிகளாக இணைந்து முன்னோக்கி செல்வது இயற்கையானதும், காலத்தின் கட்டாயமுமாகும்" என்றார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் வெற்றியை பிரதமர் சுட்டிக் காட்டினார். இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, ஆஸ்திரேலியாவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி இரு மடங்காக அதிகரித்து உள்ளதுடன் இரு நாட்டு நிறுவனங்களும் பெரும் பயன் அடைந்து உள்ளன என்றும் அவர் கூறினார்.
இதன் அடுத்த கட்டமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை மேலும் புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்ல ‘விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம்’ நோக்கிய பேச்சுவார்த்தைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் தூய்மையான எரிசக்தி மாற்றத்திற்கு ஆஸ்திரேலியாவின் நவீன தொழில்நுட்பங்கள் பெருமளவில் உதவும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். குறிப்பாக, 2030-க்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனையும், 2047-க்குள் 100 ஜிகாவாட் அணுசக்தித் திறனையும் எட்ட இந்தியா இலக்கு நிர்ணயித்து உள்ளது.
இந்த அணுசக்தித் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்த ஆஸ்திரேலியாவின் யுரேனியம் இந்தியாவுக்கு மிகவும் இன்றியமையாதது என்பதை வலியுறுத்தி, ஆஸ்திரேலிய முதலீட்டாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இரு நாட்டு பிரதமர்களின் சந்திப்பில் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள், கல்வி மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டுவதில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான விரிவான ஒத்துழைப்பு முன்னெப்போதையும் விட இப்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உறுதி அளித்தார்.
இந்தோனேசிய பயணத்தை முடித்துக் கொண்டு ஆஸ்திரேலியா வந்துள்ள பிரதமர் மோடிக்கு, மெல்போர்னில் பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு உள்ள விக்டோரியா அரசு மாளிகையில் ஆஸ்திரேலிய கவர்னர் ஜெனரல் சாம் மோஸ்டினையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
இதற்கு இடையே மெல்போர்னில் உள்ள இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்து இருந்த பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார். அங்கு ஆஸ்திரேலியக் கலைஞர்கள் ஆடிய கதக் உள்ளிட்ட இந்தியப் பாரம்பரிய நடனங்களை ரசித்த பிரதமர் மோடி, "இந்திய நடனக் கலைகள் ஆஸ்திரேலியா முழுவதும் பிரபலம் அடைந்து வருவதைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது" எனத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
ஆஸ்திரேலியப் பயணத்தை நிறைவு செய்த பிறகு பிரதமர் மோடி நியூசிலாந்து நாட்டிற்குச் செல்ல உள்ளார்.


0 கருத்துகள்: