சனி, 29 ஆகஸ்ட், 2026

"மரத்தின் மீது ஏறி பலாக்காய் பறித்த கொம்பன்" ; வால்பாறையில் காட்டு யானையின் அரிய காட்சி வைரல்!

SHARE

 "மரத்தின் மீது ஏறி பலாக்காய் பறித்த கொம்பன்" ; வால்பாறையில் காட்டு யானையின் அரிய காட்சி வைரல்!

சின்னக் கல்லார் அருவிப் பாதையில் தத்ரூப நிகழ்வு : சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் ரசனை!

 கோவை மாவட்டம், வால்பாறை அருகே பலா மரத்தின் மீது ஏறி விடாமுயற்சியுடன் பலாக்காய்களைப் பறித்துத் தின்ற கொம்பன் காட்டு யானையின் அரிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வைரலாகி வருகின்றன.

கோவை மாவட்டம், வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டாரத் தேயிலைத் தோட்டப் பகுதிகளில் தற்போது பலா மரங்களில் பலாக்காய்கள் கொத்துக் கொத்தாய்க் காய்த்துக் கனிந்து வருகின்றன.

​ஆண்டுதோறும் இந்த சீசன் காலத்தில், பலாப் பழங்களின் வாசனையால் ஈர்க்கப்படும் காட்டு யானைகள் கூட்டமாகவும், தனித் தனியாகவும் அடர்ந்த வனப் பகுதியை விட்டு வெளியேறி உணவைத் தேடி வருவது வழக்கமாகும்.

இந்நிலையில் நேற்று, வால்பாறை அருகே உள்ள புகழ்பெற்ற சின்னக் கல்லார் அருவி செல்லும் சாலையோரத்தில் இருந்த பலா மரம் ஒன்றில் காய்த்து இருந்த பலாக் காய்களைக் கண்ட கொம்பன் காட்டு யானை ஒன்று, அதை உண்பதற்காக முயன்றது.

​காய்கள் எட்டாத உயரத்தில் இருந்ததால், அந்த யானை விடா முயற்சியோடு தனது முன்னங்கால்களை மரத்தின் மீது ஊன்றி, உடலை உயர்த்தி எட்டிப் பிடித்துப் பலாக் காய்களைப் பறித்து உண்டது.

யானை மிகவும் புத்திசாலித் தனமாகவும் விடா முயற்சியுடனும் மரத்தின் மீது ஏறிப் பலாக் காயைப் பறித்துத் தின்ற இந்த அரிய காட்சியை, அவ்வழியாகச் சென்ற சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் கண்டு ரசித்ததோடு, தங்களது செல்போன்களிலும் வீடியோவாகப் பதிவிட்டனர்.

​தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதன் இடையே, பலா சீசன் காரணமாகக் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளுக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்து உள்ளதுடன், அப்பகுதியில் தீவிரக் கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: