சேதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சேதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 செப்டம்பர், 2026

அரசு அலுவலகங்களுக்குத் தொடர் வெடிகுண்டு மிரட்டல் ; அமெரிக்காவில் பணியாற்றிய நெல்லை என்ஜினீயர் கைது!

அரசு அலுவலகங்களுக்குத் தொடர் வெடிகுண்டு மிரட்டல் ; அமெரிக்காவில் பணியாற்றிய நெல்லை என்ஜினீயர் கைது!

விசாரணை முடிந்த பின் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைப்பு!

 கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்குத் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த அமெரிக்காவில் பணியாற்றிய என்ஜினீயரைக் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை முடிந்த பின்பு சிறையில் அடைப்பு

கோவை மாநகரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம், முதன்மைத் தபால் நிலையம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்குக் கடந்த சில நாட்களாக மின்னஞ்சல் மூலமாகத் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன.

ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு மற்றும் மோப்ப நாய் படை போலீசார் அங்குச் சென்று தீவிர சோதனை மேற் கொண்ட போது, அது வெறும் போலி மிரட்டல் (Hoax Threat) என்பது தெரியவந்தது. இது குறித்துக் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மிரட்டல் விடுத்த மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இதே பாணியில் தமிழகம் முழுவதும் உள்ள பல முக்கிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இது தொடர்பாகச் சென்னை பெருநகர சைபர் கிரைம் போலீசார் தீவிர தொழில்நுட்ப விசாரணை மேற்கொண்டனர்.

அதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சரத் சுப்பிரமணியம் சங்கர் என்பதும், இவர் அமெரிக்காவில் மென்பொருள் என்ஜினீயராக (Software Engineer) பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

 இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து அண்மையில் சென்னை திரும்பிய சரத் சுப்பிரமணியம் சங்கரைச் சென்னை போலீசார் கையும், களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

கோவை மாநகரில் மட்டும் இவருக்கு எதிராகத் தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக 3 சைபர் கிரைம் வழக்குகள் நிலுவையில் இருந்தன.

இதனைத் தொடர்ந்து, சென்னைக்குச் சென்ற கோவை மாநகர சைபர் கிரைம் தனிப்படை போலீசார், சரத் சுப்பிரமணியம் சங்கரை முறைப்படி கைது செய்தனர். பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, நீதிபதியின் உத்தரவின் பேரில் சென்னை மத்திய சிறையில் அடைத்தனர்.

 இச்சம்பவம் அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதன், 9 செப்டம்பர், 2026

"நள்ளிரவில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கிய தகரக் கொட்டகையை நொறுக்கிய ஒற்றை யானை" ; அலறி அடித்து ஓடி உயிர் தப்பிய தொழிலாளர்கள் - கோவையில் பரபரப்பு!

"நள்ளிரவில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கிய தகரக் கொட்டகையை நொறுக்கிய ஒற்றை யானை" ; அலறி அடித்து ஓடி உயிர் தப்பிய தொழிலாளர்கள் - கோவையில் பரபரப்பு!

2 மணி நேரம் போராடி வனத்துறையினர் விரட்டினர்: தொடரும் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அச்சம்!

 கோவை, துடியலூர் அருகே நள்ளிரவில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தகரக் கொட்டகையை உடைத்துச் சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை, வனக்கோட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று உணவு தேடி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது.

​கதிர் நாயக்கன்பாளையம் மற்றும் லட்சுமி நகர் (பேஸ் 3) ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்த அந்த யானை, அங்கு இருந்த ஒரு விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு மாடுகளுக்காகச் சேமித்து வைக்கப்பட்டு இருந்த பசுந்தீவனங்களைச் சாப்பிட்டதுடன், அங்கே குரைத்த நாய்களையும் ஆக்ரோஷமாகத் துரத்தியது.

இதனைத் தொடர்ந்து, நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் அருகில் உள்ள கட்டிடக் கட்டுமானப் பணிக்காக வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தகரக் கொட்டகையை நோக்கி அந்த ஒற்றை யானை நகர்ந்தது. கொட்டகையின் தகரங்களை உடைத்து நொறுக்கிய யானை, உள்ளே வைக்கப்பட்டு இருந்த அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களைச் சாப்பிட்டுச் சேதப்படுத்தியது.

​யானை கொட்டகையைத் தாக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த வடமாநிலத் தொழிலாளர்கள், உயிருக்குப் பயந்து அலறி அடித்தபடி ஓடிச் சென்று அருகில் இருந்த மற்றொரு கட்டிடத்திற்குள் தஞ்சம் புகுந்து உயிர் தப்பினர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாகப் பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள், குடியிருப்புப் பகுதியில் நின்று இருந்த ஒற்றை யானையைக் பட்டாசுகள் வெடித்தும் மேளங்கள் அடித்தும் காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அதிகாலை வேளையில் யானை மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது.

கதிர் நாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளான மணி நகர், கணபதி நகர், கணபதி கார்டன், போஸ்டல் காலனி, ஆர்.வி.நகர், பூச்சியூர், வெற்றிவேலவா நகர், ரேணுகாபுரம் மற்றும் லட்சுமி நகர் ஆகிய இடங்களில் இந்த ஒற்றை யானையின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவில் வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

​அதேவேளையில், இரவில் இப்பகுதிகளில் அடிக்கடி அறிவிக்கப்படாத திடீர் மின்வெட்டு ஏற்படுவதால், இருளில் யானை வருகையைக் கண்காணிக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த பீதியில் உறைந்து உள்ளனர். எனவே, மின்வாரியமும் வனத்துறையும் இணைந்து தகுந்த நடவடிக்கை எடுத்து, அப்பகுதியில் தெருவிளக்குகள் தடையில்லாமல் எரிய வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 "பள்ளி கட்டிடம் முடிகிறதுக்கு முன்னாடியே வகுப்புகளா ?" - மாணவி தலையில் விழுந்த 'பால் சீலிங்': பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தால் கோவையில் பரபரப்பு!

"பள்ளி கட்டிடம் முடிகிறதுக்கு முன்னாடியே வகுப்புகளா ?" - மாணவி தலையில் விழுந்த 'பால் சீலிங்': பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தால் கோவையில் பரபரப்பு!

உரிய சான்றிதழ் இல்லாமல் இயங்கிய டேக் அக்ஷயா அகாடமி சி.பி.எஸ்.சி பள்ளி - பெற்றோர் முற்றுகையால் பரபரப்பு!

 கோவை, துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள தனியார் சி.பி.எஸ்.சி பள்ளியில், பணிகள் நிறைவடையாத புதிய கட்டிடத்தில் மாணவியை அமர வைத்ததில் 'பால் சீலிங்' (False Ceiling) பெயர்ந்து தலையில் விழுந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

 இதைக் கண்டித்து நூற்றுக் கணக்கான பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை, துடியலூர் அடுத்த பன்னீர்மடை பகுதியில் பிரபல ‘டேக் அக்ஷயா அகாடமி’ (TAG Akshaya Academy) சி.பி.எஸ்.சி பள்ளி இயங்கி வருகிறது. கேஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்குப் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது இயங்கி வரும் பள்ளி வளாகத்தின் அருகே சுமார் 30,000 சதுர அடியில், 3 தளங்களுடன் கூடிய புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. நீரோடைப் பள்ளத்தின் ஓரத்தில், சுற்றுச்சுவர் கூட முழுமையாகக் கட்டப்படாத இந்த புதிய கட்டிடத்தில், விஜயதசமி சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் கேஜி மாணவர்களை அமர வைத்து வகுப்புகள் நடத்தப்பட்டு உள்ளன.

இதைக் கண்டித்துப் கடந்த வாரம் பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து, பழைய கட்டிடத்திற்கு மாணவர்களை மாற்றுவதாகவும் 3 நாட்களில் பணிகளை முடிப்பதாகவும் நிர்வாகம் உறுதி அளித்தது. ஆனால், பணிகள் முடியாத நிலையிலேயே மீண்டும் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களை அந்த ஆபத்தான புதிய கட்டிடத்திற்கு மாற்றி உள்ளனர்.

இந்நிலையில், நேற்று புதிய கட்டிடத்தில் கழிவறைக்குச் சென்ற மாணவி ஒருவரின் தலையில், மேல் இருந்த பால் சீலிங் (False Ceiling) திடீரென கழன்று விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அம்மாணவி காயமின்றித் தப்பினார்.

இந்தத் தகவல் பரவியதும் ஆத்திரம் அடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள், இன்று காலை பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு முதன்மை வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, பெற்றோர்கள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியதால் நிர்வாகத்தினர் பதிலளிக்க முடியாமல் திணறினர்.

கட்டிட அனுமதி (Building Approval) மற்றும் பணி நிறைவு சான்றிதழ் (Completion Certificate) பெறாமலேயே மாணவர்களை ஆபத்தான கட்டிடத்தில் அமர வைத்து உள்ளனர்.

வகுப்பறைகளில் உடையும் நிலையில் உள்ள டைல்ஸ்கள், இயங்காத மின்விசிறிகள் மற்றும் சிமெண்ட் தூசியால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படுகிறது.

முழு கட்டிடத்திற்கும் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளதால், நீண்ட வரிசையில் நின்று மதிய உணவைக் கூடச் சாப்பிட முடியாமல் குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.

ஆய்வகம் (Lab), கணினி மையம், நூலகம் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. ஆனால் ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்திக் கொண்டே செல்கின்றனர்.

தட்டிக் கேட்டால் 'டிசி' (TC) வாங்கிக் கொண்டு வெளியேறுங்கள் எனப் பள்ளி நிர்வாகம் மிரட்டுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தடாகம் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி தலைமையிலான போலீசார், பெற்றோர்களுடன் இணைந்து புதிய கட்டிட நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர் பள்ளி நிர்வாகத்திடம், "அனைத்துப் பணிகளையும் 10 நாட்களுக்குள் முழுமையாக முடித்து, முறையான பணி நிறைவுச் சான்றிதழ் பெற்ற பின்னரே புதிய கட்டிடத்தில் வகுப்புகளைத் தொடங்க வேண்டும். அதுவரை பழைய கட்டிடத்திலேயே மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த வேண்டும்" என உத்தரவிட்டார்.

காவல்துறையின் இந்த உறுதியான நடவடிக்கையைத் தொடர்ந்து பெற்றோர்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

 இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் பெரும் பரபரப்பு நிலவியது.

வெள்ளி, 4 செப்டம்பர், 2026

 "வெயிலின் கொடுமையால் குட்டையில் இறங்கிய யானைகள்" ; நீராடி மகிழ்ந்த காட்டு யானைகள் - வீடியோ வைரல்!

"வெயிலின் கொடுமையால் குட்டையில் இறங்கிய யானைகள்" ; நீராடி மகிழ்ந்த காட்டு யானைகள் - வீடியோ வைரல்!

பயிர்களைச் சேதப்படுத்திச் சென்றதால் விவசாயிகள் கவலை: வனப்பகுதிக்குள் விரட்டப் பொதுமக்கள் கோரிக்கை!

 கோவை மாவட்டம், காரமடை அருகே நிலவும் கடும் வறட்சி மற்றும் வெயிலின் தாக்கத்தைத் தணிப்பதற்காக, இரு காட்டு யானைகள் குட்டையில் நீண்ட நேரம் நீராடி மகிழ்ந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கோவை மாவட்டம், காரமடையை அடுத்து உள்ள வெள்ளியங்காடு பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள், சிறுத்தைகள், கரடிகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

நடப்பு தென்மேற்குப் பருவமழை கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொய்த்துப் போனதால், வனப்பகுதிக்குள் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, தண்ணீருக்காகவும் உணவிற்காகவும் வனவிலங்குகள் அடிக்கடி அருகில் உள்ள கிராமப்புறங்களுக்குள் ஊடுருவி வருகின்றன.

இந்நிலையில், நேற்று காரமடை வனச்சரகப் பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள், வெள்ளியங்காடு பகுதியில் உள்ள குட்டைக்கு வந்து உள்ளன. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், அந்த யானைகள் குட்டை நீருக்குள் இறங்கி நீண்ட நேரமாகக் குளித்து மகிழ்ந்து உள்ளன.

இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், யானைகளை அங்கு இருந்து விரட்டுவதற்காகச் சப்தமிட்டனர். சப்தம் கேட்டு மெதுவாகக் குட்டையிலிருந்து வெளியேறிய இரு யானைகளும், அருகில் இருந்த விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்திய பின்னரே மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றன.

காட்டு யானைகள் குட்டையில் இறங்கி நீராடிய இந்த அரிதான காட்சியை அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவிட்டு இணையத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இருப்பினும், கிராமப் பகுதிகளுக்கு மிக அருகிலேயே உள்ள குட்டையில் யானைகள் நீண்ட நேரம் முகாமிட்டு இருந்ததால் வெள்ளியங்காடு பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உறைந்து உள்ளனர். எனவே, வனவிலங்குகள் வன எல்லையைத் தாண்டி ஊருக்குள் வராதவாறு வனத்துறையினர் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

வியாழன், 3 செப்டம்பர், 2026

 "தோண்டப்பட்ட குழி சரியாக மூடப்படாததால் அபாயம்" ; கோவை சாய்பாபா கோயில் அருகே சேற்றில் சிக்கிய பேருந்து!

"தோண்டப்பட்ட குழி சரியாக மூடப்படாததால் அபாயம்" ; கோவை சாய்பாபா கோயில் அருகே சேற்றில் சிக்கிய பேருந்து!

சூயஸ் குடிநீர்த் திட்டக் குழியால் தொடரும் விபத்துக்கள் : அதிகாரிகளின் அலட்சியத்திற்குப் பொதுமக்கள் கண்டனம்!

 கோவை, சாய்பாபா கோயில் பகுதியில் சூயஸ் குடிநீர்த் திட்டப் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட பள்ளம் முறையாக மூடப்படாததால், அவ்வழியாக வந்த அரசு பேருந்து ஒன்று திடீரெனச் சேற்றுக்குழியில் சிக்கித் தவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகரில் 24 மணி நேரக் குடிநீர் விநியோகத் திட்டத்திற்காகச் சூயஸ் நிறுவனம் சார்பில் பல்வேறு இடங்களில் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், சாய்பாபா கோயில் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர்க் குழாய் பதிப்பதற்காகச் சாலை தோண்டப்பட்டது.  

​பணிகள் முடிந்த பிறகும், தோண்டப்பட்ட குழி முறையான தரத்துடன் மூடப்படாமல் அரைகுறையாக மண் கொட்டி மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 இந்நிலையில், இன்று பயணிகளுடன் அவ்வழியாக வந்த அரசு பேருந்தின் முன்பக்க சக்கரம், எதிர்பாராத விதமாக அந்த அரைகுறை குழியில் இறங்கி ஆழமாகச் சிக்கிக் கொண்டது.  

பேருந்து திடீரென ஒருபக்கமாகச் சாய்ந்து குழிக்குள் சிக்கியதால், பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். 

 ஓட்டுநரின் சாதுரியத்தால் பேருந்து கவிழாமல் நின்றதால், பயணிகள் அனைவரும் எவ்வித காயமுமின்றிப் பத்திரமாகக் கீழே இறக்கப்பட்டனர்.  இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  

இது குறித்து அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் வேதனையுடன் தெரிவிக்கையில்:

"மாநகராட்சி மற்றும் சூயஸ் நிறுவன அதிகாரிகள் தோண்டப்படும் சாலைகளைப் உடனடியாகச் சீரமைப்பதில்லை. லேசான மழை பெய்தாலோ ? அல்லது வாகனங்கள் சென்றாலோ ? மண் உள்வாங்கிப் பெரிய குழி உருவாகிறது.  

​குறிப்பாகச் சாய்பாபா கோயில் போன்ற அதிகப் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில், பல மாதங்களாக இந்த குழி சரிவர மூடப்படாமல் மண்ணை மட்டும் மூடி விட்டு அலட்சியமாக விடப்பட்டு உள்ளது.

 பெரிய விபத்து ஏதேனும் நடப்பதற்குள் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டுச் சேதம் அடைந்த சாலைகளை முழுமையாகத் தார்ச் சாலையாகச் சீரமைக்க வேண்டும்"* எனக் கோரிக்கை விடுத்து உள்ளனர்.