ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – காவல் ஆய்வாளரை அரிவாளால் தாக்கிய நபர் மீது துப்பாக்கிச்சூடு...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – காவல் ஆய்வாளரை அரிவாளால் தாக்கிய நபர் மீது துப்பாக்கிச்சூடு...

 கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் காவல் ஆய்வாளரை தாக்கி தப்ப முயன்ற போது துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தனர்.

கோவை மாநகர அனைத்து மகளிர் காவல் நிலையம் (தெற்கு) எல்லைக்குட்பட்ட பகுதியில், 14 வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று 12-ம் தேதி இரவு சிறுமி தொடர்பாக கிடைத்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல் நிலையம் (தெற்கு) போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சந்தோஷ் (24), தவசி (28) ஆகிய இருவரும் சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று, கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனிடையே, சிறுமியை மிரட்டுவதற்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் அரிவாளை தவசி மறைத்து வைத்திருந்த இடத்திற்கு, அதை கைப்பற்றுவதற்காக காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளி தலைமையிலான போலீசார் அவரை இன்று மாலை அழைத்துச் சென்றனர்.

அப்போது மறைத்து வைத்திருந்த அரிவாளை திடீரென எடுத்த தவசி, காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காவல் ஆய்வாளருக்கு காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து அங்கிருந்து தப்பியோட முயன்ற தவசியை, பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். பலமுறை எச்சரித்தும் தவசி மீண்டும் அரிவாளால் தாக்க முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து காவல் அதிகாரிகளின் உயிருக்கு ஏற்பட்ட உடனடி ஆபத்தைத் தவிர்க்கும் வகையில், தற்காப்பு நடவடிக்கையாக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் தவசியின் இடது காலில் காயம் ஏற்பட்டது.

காயமடைந்த தவசிக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரிவாள் தாக்குதலில் காயமடைந்த காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த வழக்கில் சந்தோஷ் மற்றும் தவசி ஆகிய இருவர் மீதும் சட்டப்படி தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்கள் கிடைக்கப்பெற்றவுடன் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் நலனுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருவதாகவும் கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

 "14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை" ; தலைமறைவான இருவர் கைது - கோவை காவல் ஆய்வாளரை அரிவாளால் வெட்டிய குற்றவாளி துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு!

"14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை" ; தலைமறைவான இருவர் கைது - கோவை காவல் ஆய்வாளரை அரிவாளால் வெட்டிய குற்றவாளி துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு!

கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் : தற்காப்பிற்காகக் காலில் சுட்டுப் பிடித்த காவல்துறை!

 கோவை மாநகரில் 14 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான நபர், மறைத்து வைத்து இருந்த அரிவாளை மீட்க அழைத்துச் சென்ற போது பெண் காவல் ஆய்வாளரைத் தாக்கித் தப்பியோட முயன்றதால், காவல்துறையினர் அவரைத் தற்காப்பிற்காகத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகரம், தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று (12.09.2026) இரவு சுமார் 7.30 மணி அளவில் 14 வயது சிறுமி ஒருவர் இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகாரளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த தெற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

​விசாரணையில், சந்தோஷ் (24) மற்றும் தவசி (28) ஆகிய இருவர் சேர்ந்து அச்சிறுமியைக் கடத்திச் சென்று, கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

 இதை அடுத்து, தலைமறைவாக இருந்த சந்தோஷ் மற்றும் தவசி ஆகிய இருவரையும் போலீசார் உடனடியாகக் கைது செய்தனர்.

 பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, சிறுமியை மிரட்டுவதற்குப் பயன்படுத்திய அரிவாளை மறைத்து வைத்து இருக்கும் இடத்தை அடையாளம் காட்டுவதாக எதிரி தவசி தெரிவித்து உள்ளார். அதன் பேரில், தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுவர்ணவள்ளி தலைமையிலான காவல் குழுவினர், தவசியை குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

​அப்போது, அங்கு மறைத்து வைத்து இருந்த அரிவாளைத் திடீரெனக் கையில் எடுத்த தவசி, காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியைப் பயங்கரமாக வெட்டினார். இதில் ஆய்வாளரின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

ஆய்வாளரை வெட்டிவிட்டுத் தப்பியோட முயன்ற தவசியைப் பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சிலம்பரசன் மற்றும் காவலர்கள் உடனடியாக எச்செரித்தனர். எனினும், எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் மீண்டும் அரிவாளுடன் காவல் அதிகாரிகளைத் தாக்க முயன்றதால், காவல் அதிகாரிகளின் உயிரைப் பாதுகாக்கும் பொருட்டுத் தற்காப்பு நடவடிக்கையாக தவசியின் இடது காலில் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டார்.

​துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குற்றவாளி தவசிக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

 அரிவாள் வெட்டில் காயமடைந்த காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

​கைது செய்யப்பட்ட சந்தோஷ் மற்றும் தவசி மீது போக்சோ (POCSO) உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தயவுதாட்சண்யமின்றி சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதி செய்யக் கோவை மாநகரக் காவல்துறை முன்னுரிமை அளித்து வருவதாகவும் காவல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.

"குழந்தையுடன் அன்பாகச் உரையாடிய அமைச்சர் அருண்ராஜ்" ; கோவை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு!

"குழந்தையுடன் அன்பாகச் உரையாடிய அமைச்சர் அருண்ராஜ்" ; கோவை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு!

குழந்தைகள் வார்டில் நெகிழ்ச்சி சம்பவம்: பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் சம்பத் குமாரும் பங்கேற்பு!

 கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ், கோவை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

 அப்போது குழந்தைகள் வார்டில் இருந்த சிறுமி ஒருவர் அமைச்சருடன் சுவாரசியமாக உரையாடிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு அரசியல் மற்றும் அரசு தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகச் கோவைக்கு வருகை தந்து இருந்தனர்.

இந்நிகழ்வுகளின் இடையே, கோவை அரசு தலைமை மருத்துவமனைக்குத் திடீரெனச் சென்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், அங்கு இருந்த வார்டுகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை வசதிகளை நேரில் ஆய்வு செய்தார். அவருடன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் மற்றும் மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.

மருத்துவமனையின் குழந்தைகள் நல வார்டை ஆய்வு செய்ய அமைச்சர் சென்ற போது, அங்குச் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிறுமி ஒருவரிடம் நலம் விசாரித்தார். அப்போது அச்சிறுமி எவ்வித தயக்கமுமின்றி, அமைச்சரிடம் மிகவும் மழலை மொழியில் உற்சாகமாகப் பேசினார்.

சிறுமியின் பேச்சைக் கேட்டுப் புன்னகைத்த அமைச்சர், அவருக்கு அளித்துவரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்ததுடன், அச்சிறுமிக்கு ஆறுதலும் அன்பும் தெரிவித்தார்.

 அமைச்சரும் சிறுமியும் அன்போடு பேசிக்கொண்ட இந்த அழகான தருணம் அங்கு இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும் கவனத்தையும் ஈர்த்தது.

சனி, 12 செப்டம்பர், 2026

"பிரிமியம் பத்மினி முதல் மாடர்ன் கார் வரை" ; கோவையில் களைகட்டிய பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகன விற்பனை மேளா!

"பிரிமியம் பத்மினி முதல் மாடர்ன் கார் வரை" ; கோவையில் களைகட்டிய பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகன விற்பனை மேளா!

வாடிக்கையாளர்கள் குவிந்ததால் விற்பனை மேளாவை நீட்டிக்கத் திட்டம் : துடியலூர் அருகே ஆயிரக் கணக்கான கார்கள் அணிவகுப்பு!

 கோவை, மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் அருகே நடைபெற்று வரும் பிரம்மாண்டமான பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனக் கண்காட்சி மற்றும் விற்பனை மேளாவில் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் குவிந்து தங்களுக்குப் பிடித்த வாகனங்களை மகிழ்ச்சியோடு வாங்கிச் செல்கின்றனர்.

கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள துடியலூர் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட முன்னணிப் பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகன (Used Cars) விற்பனை நிறுவனங்கள் இணைந்து நடத்திய அதிரடி விற்பனை மேளா கடந்த 3 நாட்களாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

​இந்தக் கண்காட்சியில் பழமையான பாரம்பரியமிக்க 'பிரிமியம் பத்மினி' (Premier Padmini) கார்கள் முதல் சந்தைக்கு வந்த அதிநவீன ரக மாடர்ன் நான்கு சக்கர வாகனங்கள் வரை ஆயிரக் கணக்கான கார்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன. ஒரே இடத்தில் பல்வேறு பிராண்டுகளின் கார்களை நேரில் பார்த்துத் தேர்வு செய்ய முடிவதால், இந்த மேளா வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்து உள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் குடும்பங்களின் தேவைகளும் பயணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் வெளியூர்களுக்குச் செல்லும் போது, பொதுப் போக்குவரத்து அல்லது பேருந்துகளில் குடும்பத்துடன் பயணிப்பது மிகவும் கடினமானதாக உள்ளது. மேலும் அதிக நேரம் விரயமாவதோடு, நீண்ட நேரப் பயணத்தால் உடல்நலக் குறைபாடும் உடல் அசதியும் ஏற்படுகிறது.

​ஒரு குடும்பத்தினர் பாதுகாப்பாகவும், விரைவாகவும், எவ்வித உடல் அசதியுமின்றி உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் சென்று வருவதற்குச் சொந்தமாக நான்கு சக்கர வாகனம் வைத்து இருப்பதே சிறந்தது என்பதால், பொதுமக்கள் மத்தியில் கார்களின் பயன்பாடும் தேவையும் பெருமளவில் அதிகரித்து உள்ளது.

இதன் காரணமாக, இந்த மேளாவில் ஆயிரக் கணக்கான வாடிக்கையாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் வருகை தந்து, ஒரே இடத்தில் தங்களுக்குப் பிடித்தமான கார்களைப் பார்வையிட்டு, மற்றும் வசதிக்கு ஏற்ற வாகனங்களை மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர்.

​மக்கள் இடையே கிடைத்த அமோக வரவேற்பு மற்றும் வாடிக்கையாளர்களின் வருகை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதன் காரணமாக, இந்த விற்பனை மேளாவை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்க விற்பனை நிறுவனங்கள் திட்டமிட்டு உள்ளன.

லண்டனில் அஜித் குமாரின் கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய் !

லண்டனில் அஜித் குமாரின் கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய் !

 போட்டி நடக்கும் இடத்திற்கு வந்த முதல்வர் ஜோசப் விஜய் அங்கு பந்தயத்திற்கு தயாராக இருந்த அஜித் குமாரை நோக்கி ஓடிச் சென்று கட்டித் தழுவினார். இருவரும் பரஸ்பரம் முத்தமிட்டு தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர்.

இங்கிலாந்தில் நடைபெறும் லீ மான்ஸ் கோப்பை தொடரில், நடிகரும் ரேசருமான அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கொடி அசைத்து இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டிற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், உலகளாவிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், செப்டம்பர் 10-ஆம் தேதி, இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றார்.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, இங்கிலாந்தின் நார்தாம்ப்டன்ஷையரில் உள்ள உலகப் புகழ் பெற்ற சில்வர்ஸ்டோன் ஓடுதளத்திற்கு (Silverstone Circuit) சென்ற முதலமைச்சர் விஜய், உலகப்புகழ் பெற்ற லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார். லீ மான்ஸ் கோப்பை நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று இந்த சர்வதேச நிகழ்வில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

போட்டி நடக்கும் இடத்திற்கு வந்த முதல்வர் ஜோசப் விஜய் அங்கு பந்தயத்திற்கு தயாராக இருந்த அஜித் குமாரை நோக்கி ஓடிச்சென்று கட்டித் தழுவினார். இருவரும் பரஸ்பரம் முத்தமிட்டு தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர். பின்னர் போட்டியில் பங்கேற்கும் சக வீரர்கள் ஒவ்வொருவரையும் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு, அஜித் குமார் அறிமுகம் செய்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து, அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அவருடயை காரில் அமர்ந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் இந்திய நேரப்படி, இரவு 9.40 மணிக்கு லீமான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த லீ மான்ஸ் கோப்பை தொடரில் அஜித் குமார் தவிர்த்து, இந்தியாவின் முன்னணி ஃபார்முலா 1 வீரர்களான நரேன் கார்த்திகேயன் மற்றும் ஆதித்யா பட்டேல் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

மேலும் முன்னதாக சில்வர்ஸ்டோன் மைதானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அஜித் குமார், தமது அழைப்பை ஏற்று இங்கு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

தமிழ்த் திரைத்துறையில் பல ஆண்டுகளாக தல - தளபதி என்று கொண்டாடப்பட்ட, கோடிக் கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஜோசப் விஜய்யும், அஜித் குமாரும் லண்டனில் சந்தித்துக் கொண்டது, ஒட்டுமொத்த ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

 "விவசாய நிலத்தில் 12 அடி நீள ராஜநாகம்" ;  அலறி ஓடிய தொழிலாளர்கள் - அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்த மேட்டுப்பாளையம் வனத்துறை!

"விவசாய நிலத்தில் 12 அடி நீள ராஜநாகம்" ; அலறி ஓடிய தொழிலாளர்கள் - அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்த மேட்டுப்பாளையம் வனத்துறை!

தேக்கம்பட்டியில் சுற்றிய கொடிய விஷப்பாம்பு: காரமடை அருகே பரபரப்பு!


கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள காரமடை தேக்கம்பட்டி பகுதியில் விவசாய நிலத்தில் பதுங்கி இருந்த சுமார் 12 அடி நீளமுள்ள கொடிய விஷமுடைய ராஜநாகம்  உயிருடன் மீட்கப்பட்டு அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக விடுவிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி பகுதி பவானி ஆற்றின் கரையோரத்திலும் வனப்பகுதியை ஒட்டியும் அமைந்து உள்ளதால், காட்டு யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இங்கு அதிகமாகக் காணப்படும். தென்னை, வாழை, பாக்கு மற்றும் காய்கறி விவசாயம் இங்குப் பிரதானமாக நடைபெற்று வருகிறது.

​இந்நிலையில், தேக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் (55) என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் நேற்று வழக்கம் போல் தொழிலாளர்கள் விவசாயப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு இருந்த புதர் பகுதிக்குள் பிரம்மாண்டமான நாகப்பாம்பு ஒன்று சீறிக்கொண்டு இருப்பதைக் கண்ட பணியாளர்கள், அதிர்ச்சியிலும், அச்சத்திலும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

உடனடியாக இது குறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்தவுடன் மேட்டுப்பாளையம் வனச்சரகர் சசிகுமார் தலைமையிலான வனப்பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

​புதருக்குள் பதுங்கி இருந்த அந்தப் பாம்பைப் பரிசோதித்த போது, அது மிகவும் கொடிய விஷத்தன்மை கொண்ட சுமார் 12 அடி நீளமுள்ள ராஜநாகம் என்பது தெரியவந்தது.

 வனத்துறையினர் சாதுரியமாகச் செயல்பட்டு, நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் அந்த ராஜநாகத்தைப் பாதுகாப்பான முறையில் உயிருடன் பிடித்தனர்.

பிடிபட்ட 12 அடி ராஜநாகத்தைப் பிளாஸ்டிக் பேரலில் பாதுகாப்பாக அடைத்த வனத்துறையினர், அதைத் தேக்கம்பட்டி வனப்பகுதியை ஒட்டியுள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று பத்திரமாக விடுவித்தனர்.

​விவசாய நிலத்திற்குள் கொடிய விஷமுடைய 12 அடி ராஜநாகம் புகுந்து பிடிபட்ட சம்பவம், அப்பகுதி விவசாயிகளிடையேயும் பொதுமக்களிடையேயும் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


வெள்ளி, 11 செப்டம்பர், 2026

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை" ; அனைத்துக் கட்சியினர் திரண்டு மலரஞ்சலி!

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை" ; அனைத்துக் கட்சியினர் திரண்டு மலரஞ்சலி!

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு: காந்தி சிலை பேருந்து நிலையத்தில் அன்னதானம்!

​ கோவை மாவட்டம், வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகியும் சமூக நீதிப் போராட்ட வீரருமான இமானுவேல் சேகரனாரின் 69-ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு, அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு, வால்பாறை தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் சார்பில் வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலைய வளாகத்தில் சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

​விழாவையொட்டி, அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவுருவப் படத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவியும் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் வால்பாறை சட்டமன்றத் தொகுதி தி.மு.க உறுப்பினர் குட்டி என்ற ஆ. சுதாகர், அ.தி.மு.க நகரத் துணைச் செயலாளர் பொன் கணேசன், ம.தி.மு.க ஒன்றியச் செயலாளர் கல்யாணி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் செந்தில் முருகன், புதிய தமிழகம் கட்சியின் நகரச் செயலாளர் அமிர்தராஜ், ஒன்றியச் செயலாளர் தனசிங், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மாநிலத் தலைவர் கோவை பொன்னன், புதிய தமிழகம் தொழிற்சங்கத் தலைவர் பால்ராஜ், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மேத்யூ, வெள்ளியங்கிரி, வால்பாறை நகர்மன்றத் துணைத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டப் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த குருபூஜை விழாவில், அஞ்சலி செலுத்த வந்த நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அனைவருக்கும் உணவு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்களும் சமுதாயப் பெரியோர்களும் கலந்து கொண்டு தியாகி இமானுவேல் சேகரனாருக்குப் புகழஞ்சலி செலுத்தினர்.