அ.தி.மு.க கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸுக்கு 5 தொகுதிகள் ; த.ம.மு.க விற்கு 1 தொகுதி ஒதுக்கீடு - தாமரை சின்னத்தில் ஜி.கே வாசன் போட்டி !!!
அ.தி.மு.க தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று உள்ள ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸுக்கு 5 தொகுதிகளும், ஜான் பாண்டியனின் த.ம.மு.க விற்கு 1 தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
சட்டமன்ற தேர்தல் பணிகள் தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீட்டில் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அ.தி.மு.க தலைமை வகிக்கிற தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஜி.கே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகளும், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 1 தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் தமிழக பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் ஆகியோர் தொகுதி பங்கீடு குறித்து நேற்று ஆலோசித்தனர்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே வாசன்,
“தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடுவதற்காக தமிழ் மாநில காங்கிரஸுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிளியூர், கும்பகோணம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுகிறோம். 5 இடங்களிலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு வெற்றி பெறுவோம்.
எங்கள் கூட்டணியில் தொகுதிகளின் எண்ணிக்கை, ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகள் அனைத்தும் கூட்டணி கட்சித் தலைவர்களோடு கலந்து பேசி ஒத்த கருத்தோடு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேர்தலில் தமாகா கட்சியானது தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது. தேர்தல் ஆணையத்தின் கோட்பாடுகளுக்கு இணக்கமாக வர முடியாததால் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட முடியாமல் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம்” என்றார்.
அவரைத் தொடர்ந்து செதியாளர்களிடம் பேசிய ஜான் பாண்டியன்,
“கூட்டணி உடனான பேச்சுவார்த்தையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு நீண்ட நாள் கோரிக்கையான ஒரு பொது தொகுதியை மனநிறையோடு வழங்கி உள்ளார்கள். எங்களுக்கு ராஜபாளையம் தொகுதியை ஒதுக்கி உள்ளனர். இந்த தேர்தலில் எங்களுக்கு பொது சின்னம் வழங்கப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க, பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளையும் கலந்து பேசி தான் எந்த சின்னத்தில் போட்டியிடப் போகிறோம் என்பதை முடிவு செய்ய முடியும். விருப்பத்தொகுதி பட்டியலில் பல தொகுதிகளை கேட்டோம். இப்போது பொது தொகுதி வழங்கப்பட்டு இருப்பதால் மனநிறைவோடு போகிறோம்” என்றார்.

0 கருத்துகள்: