இன்னும் 6 மாதங்களே மிச்சம்!" - உயிர்க்காகப் போராடும் 2.5 வயதுக் குழந்தை : கோவையில் கைகொடுத்த ஏழை மக்கள்; நெகிழ்ச்சியான போராட்டம் !!!
SMA Type 1 அரிய வகை நோயால் பாதிப்பு ; ₹1.5 கோடி மருந்துக்காகத் தவிக்கும் துடியலூர் தம்பதி - அரசுக்கு உருக்கமான வேண்டுகோள் !!!
கோவை, துடியலூர் பகுதியைச் சேர்ந்த அஜய் சில்வஸ்டர் - சரண்யா தம்பதியினரின் 2.5 வயது ஆண் குழந்தை, SMA Type 1 (Spinal Muscular Atrophy) எனும் மிக அரிய வகை தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
இந்தக் குழந்தையின் உயிரைக் காக்க இன்னும் 6 மாதங்களே அவகாசம் உள்ள நிலையில், மருந்திற்கான ₹1.5 கோடி நிதியைத் திரட்ட முடியாமல் அந்தப் பெற்றோர் கண்ணீருடன் போராடி வருகின்றனர்.
இந்த நோயைக் குணப்படுத்த வழங்கப்படும் மருந்தை, குழந்தை 3 வயதை எட்டுவதற்குள் செலுத்த வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. தற்போது குழந்தைக்கு 2.5 வயது முடிந்து விட்ட நிலையில், கையில் இருக்கும் மிகக் குறுகிய காலத்திற்குள் ₹1.5 கோடி திரட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அஜய் சில்வஸ்டருக்கு இது எட்டாக்கனியாக உள்ளது.
இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்களுக்குத் தொடர்ந்து உணவு வழங்கி வரும் ஆட்டோ ஓட்டுநர் மணி, இக்குழந்தையின் நிலை அறிந்து உணவு வாங்க வந்த ஏழை மக்களிடம் குழந்தையின் நிலை குறித்து அவர் எடுத்துரைக்க, தங்களின் பசியைத் தீர்க்க வந்த உணவைப் பெற்றுக் கொண்ட அந்த எளிய மக்கள், தங்களால் முடிந்த சிறு தொகையை (சில்லறை காசுகள் முதல் நூறு ரூபாய் வரை) அக்குழந்தையின் உயிரைக் காக்க வழங்கினர்.
"பசியோடு இருப்பவர்களே குழந்தையின் உயிரைக் காக்க முன் வந்தது" அங்கு இருந்தோரை கண்கலங்க வைத்தது.
"மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும், அரசு மருத்துவமனைக்குச் செல்லப் பரிந்துரை செய்தும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை" எனத் தாய் சரண்யா வேதனையுடன் தெரிவிக்கிறார். இன்னும் சில மாதங்களே மீதமுள்ள நிலையில், தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு அரிய வகை நோய்களுக்கான நிதியுதவித் திட்டத்தின் கீழ் மருந்தைப் பெற்றுத் தர வேண்டும் என்பதே அவர்களின் ஒரே கோரிக்கை.
மேலும் இந்தக் குழந்தையின் உயிரைக் காக்கத் தங்களால் முடிந்த சிறு தொகையை வழங்கவோ அல்லது மருத்துவ உதவி குறித்த தகவல்களைப் பகிரவோ விரும்புவோர் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்: தொடர்புக்கு: 7397504777 (அஜய் சில்வஸ்டர் - குழந்தையின் தந்தை) ....

0 கருத்துகள்: