நிதீஷ்குமாரின் கட்சியைப் போல அ.தி.மு.க வை, பா.ஜ.க வால் எளிதாகக் கையாள முடியாது : தொல். திருமாவளவன் !!!
பிகாரில் முதல்வர் நிதீஷ்குமாரைக் கையாண்டது போல, அ.தி.மு.க வை, பா.ஜ.க வால் எளிதாகக் கையாள முடியாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
தென்காசியில் இருந்து ஈரோடு செல்லும் வழியில், திண்டுக்கல் புறவழிச் சாலையில் கட்சியினரை சனிக்கிழமை சந்தித்த அவர் செய்தியாளா்களிடம் கூறும்போது:
காங்கிரஸ், தி.மு.க இடையிலான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். மதுரையில் பா.ஜ.க கூட்டம் நடைபெறும் வளாகத்தில் பெரியார் ஈ.வெ.ரா வின் படம் அகற்றப்பட்டு இருக்கிறது. இதேபோல, அண்ணா, ஜெயலலிதா ஆகியோரின் படங்களை அகற்றாமல் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்த்துக் கொள்ள வேண்டும்.
மதுரையை அயோத்தியாக மாற்றுவோம் என பா.ஜ.க தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால் மதுரை, உத்தரபிரதேசத்தில் இல்லை என்பதையும் தமிழ்நாட்டில் இருக்கிறது என்பதையும் பா.ஜ.க வினர் புரிந்து கொள்ள வேண்டும். அயோத்தியாக மாற்றுவதற்கு தமிழக மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் மதவாத அரசியலுக்கு இடமில்லை. சமூக நல்லிணக்கத்துக்கான இடம் தமிழகம் என்பதைத் தான் முருகனுடைய வாழ்க்கையும், வரலாறும் உணர்த்துகிறது.
தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது பேச்சுவாா்த்தைக்குப் பிறகு அறிவிக்கப்படும். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் எங்களது கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவோம்.
பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க வினர் அமைச்சர்களாக வருவார்கள் என நயினார் நாகேந்திரன் கூறுகிறார். அதற்கு எடப்பாடி பழனிசாமி இடம் அளிக்க மாட்டார் என நம்புகிறோம்.
பிகாரில் நிதீஷ் குமாரை கையாண்டது போல, தமிழ்நாட்டில் அ.தி.மு.க வையோ, தி.மு.க வையோ பா.ஜ.க வால் எளியதாகக் கையாள முடியாது.
அ.தி.மு.க வுக்கென தனித் தன்மை இருக்கிறது. பா.ஜ.க வால் அ.தி.மு.க வை எளிதாக விழுங்கி செரித்து விட முடியாது.
முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வத்தை அடிப்படை உறுப்பினராகக் கூட அ.தி.மு.க வில் இணைந்துக் கொள்ளவில்லை. அதனால் தான், அவர் தி.மு.க வில் இணைந்து இருக்கிறார்.
அவரது வருகை தி.மு.க கூட்டணிக்கு வலு சேர்க்கும். மாறுபட்ட கொள்கைகளைக் கொண்ட இயக்கங்களாக தி.மு.க வும், அ.தி.மு.க வும் இல்லை. கொள்கையைப் பொருத்தவரை, இரு கட்சிகளுக்கும் ஒரே நிலைப்பாடு தான் என கூறினார்.

0 கருத்துகள்: