ஹோர்முஸ் நீரிணை வழியாக தடையற்ற கப்பல் போக்குவரத்து: இந்தியா - யூஏஇ தலைவர்கள் பேச்சு !!!
ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் (யூஏஇ) இணைந்து செயல்பட முடிவெடுத்து உள்ளன.
அமீரக அதிபர் எச். எச். ஷேக் முகமது பின் ஸாயெத் அல் நயனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அந்நாட்டு மக்களுக்கு அவர் ஈகைத் திருநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது, இந்தியா - யூஏஇ இருநாட்டுத் தலைவர்களும் மேற்காசியாவின் இப்போதைய சூழல் குறித்து ஆலோசித்ததாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
யூஏஇ மீதான அனைத்து தாக்குதல்களையும் அதனால் ஏற்பட்ட அப்பாவி மக்களின் உயிரிழப்புகளையும் பொதுச் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்களையும் இந்தியா வன்மையாகக் கண்டிப்பதை மீண்டுமொருமுறை யூஏஇ தலைமையிடம் பிரதமர் வலியுறுத்தினார்.
ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதிசெய்வதன் முக்கியத்துவத்தை இந்தியா - யூஏஇ ஆமோதித்தன.
நாங்கள் அப்பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத் தன்மையை விரைந்து திரும்பக் கொண்டு வர நாங்கள் தொடர்ந்து ஒருங்கிணைந்து பணியாற்றுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த பிப். 28 முதல் தொடங்கிய ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்கள் மற்றும் அதற்கு ஈரான் படைகளின் எதிர்வினை ஆகியவற்றால் மேற்காசிய பிராந்தியத்தில் பெரும்பதற்றமான சூழல் நிலவுகிறது. ஈரான் போரால் ஹோர்முஸ் நீரிணை தற்காலிக மூடல் காரணமாக கடந்த இரு வாரங்களாக பாரசீக வளைகுடா பகுதியில் இருந்து வெளியேற முடியாமல் பல நாடுகளின் சரக்கு கப்பல்களும் ஸ்தம்பித்து நின்றன. இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிசெய்ய இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் (யூஏஇ) இணைந்து செயல்பட முடிவெடுத்து உள்ளன.

0 கருத்துகள்: