சனி, 28 மார்ச், 2026

செந்தில் பாலாஜி போட்டி : கோவை அ.தி.மு.க வின் கோட்டை - அடித்துச் சொன்ன எஸ் பி வேலுமணி !!!

SHARE

செந்தில் பாலாஜி போட்டி : கோவை அ.தி.மு.க வின் கோட்டை -  அடித்துச் சொன்ன எஸ் பி வேலுமணி !!!

கோவை விமான நிலையத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு கட்சித் தொண்டர்கள் இன்று உற்சாக வரவேற்பு அளித்தனர். வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் கோவை வந்த அவரை, கோவை மாவட்டத்தில் போட்டியிடும் எட்டு அ.தி.மு.க வேட்பாளர்களும் தங்களது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி. வேலுமணி, 

கோவை மாவட்டம் முழுவதும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும், நீலகிரி மற்றும் திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக கூறினார்.

கோவை மாவட்டம் எப்போதும் அ.தி.மு.க வின் கோட்டையாக இருந்து வருவதாகவும், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலத்தில் ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரிய வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்திக்கடவு – அவிநாசி திட்டம், விமான நிலைய விரிவாக்கம், மேம்பாலங்கள் உள்ளிட்ட பல முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக கோவையில் எந்த புதிய திட்டங்களும் முன்னேறவில்லை என குற்றம் சாட்டிய அவர், மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமைந்தால் வளர்ச்சி திட்டங்கள் விரைவாக கொண்டு வரப்படும் என்றார். கோவை மட்டுமின்றி திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்றும், மாநிலம் முழுவதும் 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

தற்போதைய தி.மு.க ஆட்சியில் குடிநீர் வரி, சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் உயர்த்தப்பட்டு உள்ளதாகவும், மக்கள் இதை தெளிவாக உணர்ந்து உள்ளதாகவும் அவர் கூறினார். அ.தி.மு.க ஒரு பெரிய கட்சி என்பதால் கூட்டணியில் சிறிய பிரச்சினைகள் இருப்பது இயல்பானது என்றும், அவை காலப்போக்கில் சரியாகிவிடும் என்றும் தெரிவித்தார்.

மேலும், தி.மு.க இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை என்றும், அவர்கள் அறிவித்த பின் அரசியல் நிலைமைகளை மதிப்பீடு செய்யலாம் என்றும் கூறிய எஸ்.பி. வேலுமணி, மீண்டும் வளர்ச்சி பெற மக்கள் அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு அளிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: