முதல் நாளே மனு தாக்கல் செய்த மு.க.ஸ்டாலின்; வெற்றி நிச்சயம் என நம்பிக்கை !!!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து 4 -வது முறையாக கொளத்தூர் தொகுதியில் களமிறங்குகிறார்.
கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து 4 வது முறையாக போட்டியிடும் தமிழக முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின், தமது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.
சென்னை, செம்பியம், பேப்பர் மில் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த மாநகராட்சி அலுவலக கட்டட வளாகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தியிடம் அவர் தனது வேட்பு மனுவை அளித்தார்.
வேட்புமனு தாக்கல் செய்த பின் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,
"தி.மு.க வின் வேட்பாளராக, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடுகிறேன். கொளத்தூர் தொகுதி மக்கள் 4 வது முறையும் என்னை அமோகமான வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயமாக வெற்றி பெற வைப்பார்கள் என்ற முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
எங்களின் தேர்தல் பிரச்சாரம் எப்போதும் போல வலுவாக இருக்கும். கடந்த மூன்று முறை நின்று போட்டியிட்டதை விட 4-வது முறை கொளத்தூர் தொகுதி மக்களிடம் அதிக ஆதரவை பார்க்க முடிகிறது. டெல்லியை எதிர்த்து தமிழ்நாடு போராடுகிறது. தமிழ்நாட்டின் உரிமையை காப்பதற்கான இந்த வெற்றி மிகப் பெரிய வெற்றியாக அமையும்" என்று ஸ்டாலின் கூறினார்.
தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலினுக்கு முதலமைச்சர் என்ற அந்தஸ்தை கொடுத்த தொகுதி கொளத்தூர். 2011, 2016, 2021 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்கு முன்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.
அதாவது 1984 முதல் 2006 -ம் ஆண்டு வரை 6 சட்டமன்றத் தேர்தல்களில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு 4 முறை மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று உள்ளார். 2011 ஆம் ஆண்டு முதல் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 3 முறை ஹாட்ரிக் வெற்றியும் கண்டு உள்ளார். இந்த நிலையில், தொடர்ந்து நான்காவது முறையாக, 2026 சட்டப் பேரவை தேர்தலிலும் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலேயே களமிறங்குகிறார்.
அவரை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் சந்தான கிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி சார்பில் சுந்தர பாண்டியன், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வி.எஸ் பாபு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கொளத்தூர் தொகுதியில் கடந்த 2011 தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் சைதை துரைசாமியை 68,677 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் வீழ்த்தினார். 2016 பொதுத் தேர்தலில், அ.தி.மு.க வேட்பாளர் ஜெ.சி.டி. பிரபாகரனை 91,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டார்.
இதேபோன்று, 2021 சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க வேட்பாளர் ஆதிராஜாராமை 70 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் வென்றார்.
கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை, ஒன்பது சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு உள்ள மு.க.ஸ்டாலின் 7 முறை வெற்றி கண்டு உள்ளார்.
2026 தமிழக சட்ட மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: