திங்கள், 30 மார்ச், 2026

மொத்த சொத்து மதிப்பு ரூ.603.20 கோடி - மிரட்டும் விஜய்யின் பிரமாணப் பத்திரம் !!!

SHARE

 மொத்த சொத்து மதிப்பு ரூ.603.20 கோடி - மிரட்டும் விஜய்யின் பிரமாணப் பத்திரம் !!!

ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள டி.வி.எஸ் எக்ஸ்எல் இருசக்கர வாகனம் தன்னிடம் இருப்பதாகவும் த.வெ.க தலைவர் விஜய் கூறி இருக்கிறார்.

த.வெ.க தலைவர் விஜய் தன்னிடம் மொத்தமாக ரூ. 603.20 கோடி மதிப்பில் சொத்துகள் இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (மார்ச் 30) தொடங்கி ஏப்ரல் 6 வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில், முதன் முறையாக தேர்தலில் களம் காணும் த.வெ.க கட்சியின் தலைவர் விஜய், அவருடைய வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தாக்கல் செய்தார்.

அவர் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கான வியாசர்பாடி அம்பேத்கர் அரசினர் கலைக் கல்லூரியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் விஜய் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின் போது அவர், சொத்துகள் குறித்த விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்தார்

அதில், த.வெ.க தலைவர் விஜய்-க்கு ரூ. 404.58 கோடி அளவுக்கு அசையும் சொத்துகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், 2020-21 நிதியாண்டில் ரூ. 8.4 கோடியும், 2021-22 நிதியாண்டில் ரூ. 237.46 கோடியும், 2022-23 நிதியாண்டில் ரூ. 198.71 கோடியும், 2023-24 நிதியாண்டில் ரூ. 105.69 கோடியும், 2024-25 நிதியாண்டில் ரூ. 184.53 கோடியும் வருமானம் ஈட்டியிருப்பதாக வருமான வரிக்கணக்கில் கணக்கு காட்டி இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் விஜய் தெரிவித்து உள்ளார்.

அதே போல் மனைவி சங்கீதா பெயரில் சுமார் 15.51 கோடி ரூபாய் அசையும் சொத்துகள் உள்ளன. அவருக்கு 2020-21 நிதியாண்டில் 6.13 லட்ச ரூபாய் வருமானம் காட்டப்பட்டு உள்ளது. மற்ற நிதியாண்டுகளில் வருமானம் எதுவும் காட்டப்படவில்லை.

மேலும், கையில் ரொக்கமாக ரூ. 2 லட்சமும், மனைவி கையில் ரொக்கமாக ரூ. 1 லட்சம் இருப்பதாகவும் பிரமாண பத்திரத்தில் விஜய் குறிப்பிட்டு உள்ளார். இதுதவிர, 4 விலை உயர்ந்த சொகுசு கார்களும், ஒரு விலை குறைந்த காரும் தன்னிடத்தில் இருப்பதாக விஜய் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்து உள்ளார்.

அது தவிர, ரூ. 60 ஆயிரம் மதிப்பு உள்ள டி.வி.எஸ் எக்ஸ்எல் டூ-வீலர் இருப்பதாகவும் விஜய் குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும், ரூ. 15 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்களும், ரூ. 1.20 கோடி மதிப்பிலான 883 கிராம் தங்க நகைகளும் இருப்பதாக அவர் கூறி உள்ளார்.

இதே போல், விஜய் மனைவியிடம் 4.7 கோடி ரூபாய் மதிப்பிலான 3,132 கிராம் தங்க நகைகளும், 1 கோடி மதிப்பிலான வைர நகைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

த.வெ.க தலைவர் விஜய்யிடம் 115 கோடியே 13 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் மதிப்பு உள்ள அசையா சொத்துகள் இருப்பதும் தற்போது வெளியாகி இருக்கும் பிரமாணப் பத்திரம் வாயிலாக தெரிய வந்து உள்ளது.

இத்துடன், தன் மீது எந்தவிதமான குற்றவியில் வழக்குகளும் இல்லை என்றும், அரசுக்கோ, வங்கி - நிதி நிறுவனங்களுக்கோ தான் எந்தவிதமான கடனும் செலுத்த வேண்டியது இல்லை என்றும் த.வெ.க தலைவர் விஜய் பிரமாண பத்திரத்தில் தெரிவித்து உள்ளார்.

விஜய்யிடம் கடன் வாங்கியவர்கள்

எனினும், விஜய் பல்வேறு தனி நபர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் கணிசமான தொகையை கடனாக வழங்கி இருப்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு உள்ளார். அந்த வகையில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு 3 கோடி ரூபாயும், தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு 3.02 கோடி ரூபாயும், தாயார் ஷோபா சந்திரசேகருக்கு 8.71 லட்சம் ரூபாயும் கடனாக வழங்கி உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

மேலும், ஏ.எல்.பி. அந்தோணியஸ் பிரிட்டோ மற்றும் கோகிலாம்பாள் கல்வி அறக்கட்டளை ஆகியவற்றுக்கு தலா 20 கோடி ரூபாயும், வித்யா கல்வி அறக்கட்டளைக்கு 5.84 கோடி ரூபாயும் விஜய் கடனாக வழங்கி உள்ளார்.

இது தவிர, மனைவி சங்கீதாவுக்கு 12.60 கோடி ரூபாயும், மகன் ஜேசன் சஞ்சய்க்கு 8.78 லட்சம் ரூபாயும், மகள் திவ்யா சாஷாவுக்கு 4.60 லட்சம் ரூபாயும் கடனாக வழங்கி உள்ளதாக, வேட்பு மனுவுடன் சேர்ந்து தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் த.வெ.க தலைவர் விஜய் குறிப்பிட்டு உள்ளார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: