வியாழன், 16 ஏப்ரல், 2026

ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி- காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் !!!

SHARE

 ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி- காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் !!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டியாக உள்ளது. இதற்கிடையே ராமதாஸ் - சசிகலா ஆகிய இருவரும் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கி தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், த.வெ.க தலைவர் விஜய், அனைத்திந்திய புரட்சித் தலைவர் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் சசிகலா உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரதான கட்சி தலைவர்கள் பிரச்சாரம் ஒருபுறம் இருக்க கூட்டணியை வெற்றி பெற வைக்க கூட்டணி கட்சி தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தேசிய தலைவர் நிதின் நபின், பா.ஜ.க முன்னாள் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் தமிழ்நாட்டில் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதேபோல், திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தேசிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தமிழகத்திற்கு வருகை புரிய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏப்ரல் 20-ஆம் தேதி, அரவிந்த் கெஜ்ரிவால் கொளத்தூரில் மு.க ஸ்டாலினுக்கு ஆதரவாகவும், ஏப்ரல் 21-ஆம் தேதி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக என தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே, காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் தேதியை விரைவில் அறிவிக்க இருப்பதாக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறி வந்த நிலையில், ராகுல் காந்தி ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர், காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே, தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் ராகுல் காந்திக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. புதுச்சேரியில் ஒரே நாளில் முதல்வரும், ராகுல் காந்தியும் பிரச்சாரம் செய்த போதும், தனித் தனியாகவே பிரச்சாரம் செய்தனர். 

இந்நிலையில், தமிழ்நாட்டில் இருவரும் ஒரே மேடையில் பிரச்சாரம் மேற்கொள்வார்களா ? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. முதல்வருடன் இணைந்து ராகுல் காந்தி பிரச்சாரம் செய்வாரா ?என்பது ஓரிரு நாளில் தெரிய வரும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தமிழகத்தில் பிரச்சாரம் செய்வதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: