வியாழன், 16 ஏப்ரல், 2026

மாநில பட்ஜெட்டின் நுணுக்கங்களை பி.டி.ஆரிடம் கற்றுக் கொண்டேன்- ப.சிதம்பரம் !!!

SHARE

 மாநில பட்ஜெட்டின் நுணுக்கங்களை பி.டி.ஆரிடம் கற்றுக் கொண்டேன்- ப.சிதம்பரம் !!!

மாநில பட்ஜெட்டின் நுணுக்கங்களை பி.டி.ஆரிடம் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து கற்றுக் கொண்டேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில், மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், மதுரை வைத்தியநாதபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், "மத்திய அரசின் நிதி ஆயோக் அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி, 2025-26-ஆம் ஆண்டில், இந்தியாவின் 30 மாநிலங்களுக்கான தரவரிசையில் தமிழ்நாடு முதலிடம் பிடித்து உள்ளது. இதற்காக அதிமுக, . பா.ஜ.க உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் தமிழர்கள் என்ற முறையில் மகிழ்ச்சி அடைய வேண்டும்.

தி.மு.க கூட்டணி அரசு கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றிய நலத் திட்டங்களைப் பார்ப்போம். பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கும் மகளிர் விடியல் பயணத் திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டம், தற்போது வழங்கப்படும் ₹1,000 ரூபாய் அடுத்து ₹2,000-ஆக உயர்த்தப்பட உள்ளது. முதலமைச்சரின் காலை உணவு திட்டம், 75 ஆண்டுகளுக்கு முன் காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம் போல, இத்திட்டம் முதலமைச்சரின் புகழை நிலைநாட்டும்.

புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்கள், அரசு பள்ளியில் படித்து கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ₹1,000 ஊக்கத்தொகை, தற்போது ₹1,500-ஆக உயர்த்தப்பட உள்ளது. இல்லத்தரசிகளுக்கான ரூ.8000 கூப்பன் திட்டம். இல்லதரசிகள் தங்களுக்குப் பிடித்த உபயோகப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இது உள்ளூர் பொருளாதாரத்தை, குறிப்பாக மதுரை போன்ற இடங்களின் வளர்ச்சியை மேம்படுத்தும்.

மதுரை மத்திய தொகுதி வேட்பாளரான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நிதி அமைச்சராக இருந்த போது, சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் சட்டக் கல்லூரி அமைக்க கையெழுத்திட்டு உதவினார். மாநில பட்ஜெட்டின் நுணுக்கங்களை அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன். அவர் அன்னை மீனாட்சி மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட வேட்பாளர். அவரை மீண்டும் சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தேர்தலில் தற்போது இரண்டு அணிகள் உள்ளன. ஒன்று தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அணி. மற்றொன்று . பா.ஜ.க தலைமையிலான டெல்லி அணி. கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கவே மக்கள் தி.மு.க அணிக்கு 39 தொகுதிகளிலும் வெற்றி தேடித் தந்தனர்.

இருப்பினும், அரசியல் சாசனத்தைத் திருத்த முயற்சிகள் நடக்கின்றன. தமிழ்நாட்டிலும், மேற்கு வங்கத்திலும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே, தொகுதி மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதத்திற்காக நாடாளுமன்றம் 16-ஆம் தேதி கூட்டப்படுகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டெல்லி வந்து மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க கூடாது என்பதற்காக்கவே, தேர்தல் நேரத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை மத்திய பாஜக அரசு கையில் எடுத்து உள்ளது.

இந்தியா கூட்டணியின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் அரசியல் சாசனம் காப்பாற்றப்படும். சட்டமேதை அம்பேத்கர் வழங்கிய அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க, தேர்தலில் பழனிவேல் தியாகராஜனுக்கு மகத்தான வெற்றியைத் தர வேண்டும்" என்று தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: