புதன், 29 ஏப்ரல், 2026

தனியார் பள்ளியின் உரிமம் புதுப்பிக்க ரூ.25 ஆயிரம் லஞ்சம்: மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கைது !!!

SHARE

 தனியார் பள்ளியின் உரிமம் புதுப்பிக்க ரூ.25 ஆயிரம் லஞ்சம்: மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கைது !!!

காட்பாடியில் தனியார் பள்ளியின் உரிமம் புதுப்பிப்பதற்காக ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் செந்தில்குமார் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் உள்ள பரதராமி பகுதியில் பிரபல தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. தனியார் பள்ளியின் அங்கீகார உரிமம் வழக்கமாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும்.

அதன்படி, பள்ளியின் தாளாளர் கோவிந்தராஜூலு கடந்த பிப்ரவரி மாதம் காட்பாடி விருதம்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலகத்தில் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பித்தார்.

காட்பாடி அருகே விருதம்பட்டில் தனியார் பள்ளிகளுக்காக இயங்கி வரும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், தொரப்பாடியை சேர்ந்த செந்திகுமார் (56) கல்வி அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், கல்வி அலுவலகத்தில் பணியாற்றி வந்த கண்காணிப்பாளர் செந்தில்குமார், உரிமம் புதுப்பிக்கும் பணியை தாமதப்படுத்தி வந்ததுடன், அதை விரைவாக செய்து தர ரூ.1 லட்சம் லஞ்சம் கோரியதாகக் கூறப்படுகிறது.

அதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளியின் தாளாளர் கோவிந்தராஜூலு, முதல்கட்டமாக ரூ.25 ஆயிரம் தருவதாக தெரிவித்து உள்ளார். அதை அடுத்து மனம் மாறி லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்து உள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரும் அதிகாரியை கையும், களவுமாக பிடிக்க ஒரு திட்டமிட்டனர்.

போலீசாரின் ஆலோசனைப்படி, கோவிந்தராஜூலு செந்தில்குமாரை தொடர்பு கொண்டு ரூ.25 ஆயிரம் வழங்க ஒப்புக்கொண்டு உள்ளார். அதன்படி, விருதம்பட்டு பகுதியில் உள்ள ஒரு பொது இடத்தில் வைத்து நேற்று (ஏப். 27) சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அங்கு திட்டமிட்டபடி, கோவிந்தராஜூலு பணத்தை வழங்கியவுடன், மறைந்து கண்காணித்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சங்கர் தலைமையிலான போலீசார், இன்ஸ்பெக்டர் மைதிலி உள்ளிட்ட குழுவினர் செந்தில்குமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: