திங்கள், 27 ஏப்ரல், 2026

கோடை மலர் கண்காட்சிக்கு தயாராகும் உதகை தாவரவியல் பூங்கா பணிகள் தீவிரம் !!!

SHARE

 கோடை மலர் கண்காட்சிக்கு தயாராகும் உதகை தாவரவியல் பூங்கா பணிகள் தீவிரம் !!!

உதகை தாவரவியல் பூங்காவில் நடப்பாண்டிற்கான மலர் கண்காட்சி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

'மலைகளின் அரசி' என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடைக் காலத்தின் போது, ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். உதகையின் குளு, குளு சீசனை அனுபவிக்கவும், அதன் இயற்கை சூழலை ரசிக்கவே மக்கள் இங்கு அதிக அளவில் வருகை தருகின்றனர்.

தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் இங்கு வருகை தருகின்றனர். இவர்களைக் கவரும் நோக்கிலும், சுற்றுலாவை மேலும் மேம்படுத்தும் வகையிலும், ஒவ்வொரு கோடை காலத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளை சுற்றுலா மற்றும் தோட்டக் கலைத் துறை உதகையில் நடத்தி வருகிறது.

அதில், முக்கிய நிகழ்வாக அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சி உள்ளது. இந்த மலர் கண்காட்சியைக் காண்பதற்கென்றே லட்சக் கணக்கான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருகை புரிகின்றனர்.

இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக, இந்தாண்டு நடைபெறும் மலர் கண்காட்சிக்காக பூங்காவை தயார் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

40 ஆயிரம் மலர் தொட்டிகளில் வண்ண மலர் செடிகளை நடவு செய்யும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மேரிகோல்டு, பேன்சி, பிக்கோனியா, சால்வியா, பெட்டுனியா, டெய்சி, டேலியா உட்பட லட்சக்கணக்கான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளன.

தற்போது இந்த செடிகளில் மலர்கள் பூக்கத் துவங்கி உள்ளன. தொட்டிகளில் மலர்கள் பூத்த நிலையில், அவைகளை பராமரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுதவிர ஏற்கெனவே பூங்காவின் அனைத்து பகுதிகளிலும் நடவு செய்யப்பட்டு உள்ள 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகளிலும் பூக்கள் பூக்க தொடங்கி உள்ளன.

இந்த நிலையில், சுற்றுலா பயணிகள் வசதிக்காக பூங்காவில் உள்ள புல்வெளிகள் பசுமை மாறாமல் காட்சியளிப்பதற்கான பராமரிப்பு பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்தாண்டை விட நடப்பாண்டில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தோட்டக் கலைத்துறை இணை இயக்குநர் தெரிவித்து உள்ளார். இதனை கருத்தில் கொண்டு மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: