மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு !!!
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக நிகழ்வு இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா ஏப்ரல் 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகமாக தொடங்கியது. இதை அடுத்து, தினமும் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் ப்ரியா விடையுடனும் பல்வேறு வாகனங்களில் மாசி வீதிகளில் எழுந்தருளி தினமும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக நிகழ்வு கோயில் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோயிலில் உள்ள ஆறுகால் பீடத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கு அரசியாக முடி சூட்டுவதற்காக இராயர் கிரீடம் எனப்படும் இரத்தின ஆபரணங்கள் இழைத்த வைரக் கிரீடம் அனுக்ஞை விநாயகர் சன்னதியில் இருந்து கொண்டு வரப்பட்டு புனித நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி, வைர கிரீடம் சூட்டப்பட்டு கையில் செங்கோல் வழங்கப்பட்டது. அந்த செங்கோலை, மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் உறுப்பினரான அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி பழனிவேல் ராஜன் உள்ளிட்டோர் கொண்டு வந்து கொடுத்தனர்.
இதனை அடுத்து மீனாட்சிக்கு உரிய வேப்பம்பூ மாலையும் மகிழம்பூ மாலையும் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றதை அடுத்து, அருள்மிகு மீனாட்சியம்மன் மதுரை நகரின் ஆட்சி பொறுப்பை ஏற்கிறார் என்பது ஐதீகம். பட்டாபிஷேக விழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் வரும் 28-ஆம் தேதியும், திருத்தேரோட்டம் வரும் 29-ம் தேதியும் நடைபெறுகின்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா வரும் மே மாதம் 1-ஆம் தேதி நடைபெறுகிறது.
சித்திரை திருவிழாவின் முக்கிய விழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மதுரை நகரம் விழாக் கோலம் பூண்டு உள்ளது.

0 கருத்துகள்: