திங்கள், 27 ஏப்ரல், 2026

ஓடும் ரயிலில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை- 50 வயது நபர் கைது !!!

SHARE

 ஓடும் ரயிலில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை- 50 வயது நபர் கைது !!!

வேலூர் அருகே, ஓடும் ரயிலில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 50 வயது நபரை காவல் துறையினர் கைது செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்த மதிவாணன் (வயது 50) என்பவர் தனது மனைவியுடன் பெங்களூரில் இருந்து சென்னைக்கு கே.எஸ்.ஆர் பெங்களூரு- எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் விரைவு ரயிலில் S5 பெட்டியில் (ஏப்ரல் 26) பயணம் மேற்கொண்டு இருந்தார். அந்த ரயில், அதிகாலை 02.30 மணி அளவில் காட்பாடி ரயில் நிலையத்தைக் கடந்த போது, அதே பெட்டியில், பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்த ஒரு பெண் பயணிக்கு மதிவாணன் பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், காட்பாடி ரயில் நிலையத்திற்கு உடனடியாக விரைந்து வந்த காட்பாடி ரயில்வே காவல் ஆய்வாளர் மனோன்மணி, காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார், மதிவாணனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இதை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவுச் செய்த காவல் துறையினர், ஒருங்கிணைந்த வேலூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அதைத் தொடர்ந்து, மதிவாணனை 13 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக, அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இது குறித்து ரயில்வே காவல் துறையினர் கூறுகையில், "பெங்களூரு - சென்னை விரைவு ரயிலில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நபரை கைது செய்து உள்ளோம். சம்பவம் நடந்த நேரம், சூழ்நிலை மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் உள்ளிட்ட அனைத்தையும் விரிவாக விசாரித்து வருகிறோம்.

ரயில் பயணிகளின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியம். குறிப்பாக பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில்வே போலீஸ் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்றச் செயல்களுக்கு எவ்வித சமரசமும் இல்லை; குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்து உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: