வியாழன், 16 ஏப்ரல், 2026

சாலை வலம் ஓகே தான்... என்ன விஜய் கொஞ்சம் பேசியிருக்கலாம்; சென்னை தவெக தொண்டர்கள் ஏமாற்றம் !!!

SHARE

 சாலை வலம் ஓகே தான்... என்ன விஜய் கொஞ்சம் பேசியிருக்கலாம்; சென்னை தவெக தொண்டர்கள் ஏமாற்றம் !!!

த.வெ.க வேட்பாளரை ஆதரித்து சென்னையில் விஜய் சாலை வலம் (ரோடு ஷோ) மேற்கொண்ட போதிலும், அவர் பரப்புரை மேற்கொள்ளாமல் சென்றதால், அவரது பேச்சைக் கேட்க ஆவலாக இருந்த பல்லாயிரக் கணக்கான கட்சித் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தமிழகத்தில் வரும் 23-ம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைப்பெற உள்ளது.இதற்காக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். த.வெ.க தலைவர் விஜயும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

சென்னை பெரம்பூரில் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்த அவர், தொடர்ந்து அத்தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தொடர்ந்து அன்றைய தினமே, முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, கூட்டம் கட்டுகடங்காமல் கூடியது. இதை அடுத்து உடனடியாக பேச்சை முடித்து கொண்ட விஜய், வில்லிவாக்கத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளாமல் புறப்பட்டு சென்றார்.

கொளத்தூரில் விஜய் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது அங்கு போதிய காவல் துறை பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று த.வெ.க தரப்பு குற்றம்சாட்டி இருந்ததது. இதை அடுத்து, விஜய் பிரச்சாரங்களின் போது 2 காவல் உதவி ஆணையர்கள், 6 ஆய்வாளர்கள், 8 உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 50 காவலர்கள் துப்பாக்கி ஏந்தி 10 ஜீப்களில் அவரது வாகனத்தை பின்தொடர்ந்து பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் இரண்டாம் முறையாக விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். தியாகராய நகர் தொகுதி த.வெ.க வேட்பாளர் புஸ்ஸி ஆனந்துக்கு ஆதரவு கேட்டு விஜய் அப்பகுதியில் சாலை வலம் வந்தார்.

கடந்த முறை போல இல்லாமல், இம்முறை விஜயின் வாகனம் அனைத்து இடங்களிலும் எளிதாக கடந்தது. காவல் துறையினர் அதிக அளவு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

விஜய்யை காண தியாகராய நகர் பகுதியில் பல்லாயிரக் கணக்கான த.வெ.க தொண்டர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் குவிந்து இருந்தனர். அவர்கள் விஜயை கண்டதும் விசில் அடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதை அடுத்து விஜய் தேர்தல் பரப்புரை ஆற்றுவார் என தொண்டர்கள் எதிர்பார்த்த நிலையில், சாலை வலம் மட்டும் முடித்து விட்டு அவர் பேசாமலேயே சென்று விட்டார். இதனால் அங்கு குவிந்து இருந்த த.வெ.க தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து த.வெ.க தொண்டர்கள் சிலர் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், "விஜய் அவர்களை கண்டதில் மகிழ்ச்சி. எங்கள் மத்தியில் அவர் பேசியிருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்," என்றவர்கள், " குறைவான நேரத்தில் நிறைய தொகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளதால் அவர் சாலை வலம் மட்டும் மேற்கொண்டு விரைவாக சென்று உள்ளார்" என்று அவர்களே சமாதானம் கூறினர்.

தொடர்ந்து நம்மிடம் பேசிய அவர்கள், "தமிழகத்தை இத்தனை ஆண்டுகளாக ஆண்ட கட்சிகள் மக்கள் நலனுக்காக பெரிதாக எதுவும் செய்யவில்லை. தேர்தல் நேரத்தில் தான் அவர்கள் மக்களை சந்திக்கின்றனர். இதனை நன்கு தெரிந்து தான் விஜய் மக்களுக்கு நல்லது செய்ய வந்து உள்ளார். இதனை மக்கள் புரிந்து கொண்டால் மாற்றத்தை உருவாக்கலாம். 2026 ல் நிச்சயமாக விஜய் தான் தமிழக முதல்வராக வருவார். இளைஞர்கள் அரசியல் பேசுவது விஜய்யால் தான் நடக்கிறது" என்று அவர்கள் பெருமிதத்துடன் கூறினர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: