அ.தி.மு.க வை கலைத்து விட்டு இ.பி.எஸ் பா.ஜ.க வில் சேர்ந்து கொள்ளலாம் : முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம் !!!
பா.ஜ.க வுக்கு அடிமையாக இருப்பதற்கு பதிலாக, இ.பி.எஸ் அ.தி.மு.க வை கலைத்து விட்டு செல்லலாம் என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.
தருமபுரி தடங்கம் பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி தே.மு.தி.க வேட்பாளர் இளங்கோவன், பாலக்கோடு தி.மு.க வேட்பாளர் செந்தில்குமார், பாப்பிரெட்டிப்பட்டி தி.மு.க வேட்பாளர் பழனியப்பன், அரூர் தி.மு.க வேட்பாளர் சண்முகம், பென்னாகரம் காங்கிரஸ் வேட்பாளர் தமிழ் குமரன் உள்ளிட்ட வேட்பாளர்களை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து பேசினார்.
தருமபுரிக்கு முக்கியத்துவம்
நிகழ்ச்சியில் பேசிய அவர், "நான் உள்ளாட்சி துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக இருந்த போது மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு மேடையில் பல மணி நேரம் நின்று சுழல் நிதியை வழங்கி இருக்கிறேன். இந்த திட்டத்தை கலைஞர் தருமபுரி மாவட்டத்தில் தான் தொடங்கி வைத்தார். அந்தத் திட்டம் மகளிர் மேம்பாட்டு திட்டமாக உருவாகி இருக்கிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தையும், இதே தருமபுரி மாவட்டத்தில் தான் தொடங்கி வைத்தோம். மகளிர் உரிமைத் தொகை பதிவு செய்ய முகாமை தொடங்கி வைக்க இதே தருமபுரிக்கு தான் நான் வந்தேன். 'மக்களுடன் முதல்வர்' திட்டம் ஊரக பகுதிகளுக்கு விரிவுபடுத்தி தொடங்கி வைக்கப்பட்டதும் இதே தர்மபுரியில் தான். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதியமான் கோட்டைக்கு வந்த போது விவசாய பெருங்குடி மக்கள் இணையவழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விண்ணப்பித்து ஒரே நாளில் கடன் பெறும் திட்டத்தினை இங்கே தான் தொடங்கி வைத்தேன். புதிய சாதனை திட்டத்தை தொடங்குவதற்கான இடமாக தருமபுரிக்கு கிடைத்து இருக்கிறது.
இந்தியாவுக்கே தமிழ்நாடு முன்னோடி
தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்கின்ற கூட்டத்தை விரட்டியடிக்க வேண்டும் என கேட்க இங்கு வந்து இருக்கிறேன். தமிழ்நாட்டுக்கு இழைக்கக் கூடிய அநீதிகளுக்கு எதிராக தமிழ்நாட்டை ஓரணியில் திரட்ட வந்து இருக்கிறேன். தருமபுரி என்றாலே அது திராவிட முன்னேற்ற கழகம் தான். அந்த அளவு ஏராளமான திட்டங்கள் தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்டு உள்ளது. எடுத்துக் காட்டாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கூறலாம். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சனை தீர்க்க 2008-இல் மூன்று நகராட்சிகள், 16 பேரூராட்சிகள், 7630 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1929 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதுகாப்பான குடிநீரை வழங்கியவர் தான் உங்கள் முன்னால் நின்று கொண்டு இருக்கிற இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
திட்டங்கள் நிறைவேற தர்மபுரியின் வளர்ச்சி பயணம் தொடர வேண்டும். அதற்கான வேட்பாளர்களை அறிமுகப்படுத்துகிறேன். திராவிட மாடலில் இந்தியாவுக்கு பாதை போடுவது பா.ஜ.க விற்கு பிடிக்கவில்லை. இந்தியா வளர்ந்து விட்டால் ஆர்.எஸ்.எஸ் உருவாக்க நினைக்கிற 200 ஆண்டு பிற்போக்கு சமூகத்தை உருவாக்க முடியாது. அந்த சமுதாயம் வந்தால் தான் மக்களை மயக்கி உழைப்பை சுரண்டி ஒரு சிலர் மட்டும் வளமாக வாழலாம். திராவிட மாடல் வளர்ச்சி என்பது அனைவருக்கும் ஆனது. யாரோ ஒரு சிலர் மட்டும் வளர்ந்தால் அது வியாபாரம். எல்லோரும் வளரும் எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பது திராவிட மாடலின் சக்சஸ். அதனால் தான் தமிழ்நாடு முழுவதும் பரவலான வளர்ச்சியை கொண்டு செல்கிறோம். அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குகிறோம். தர்மபுரியில் தொழில் பூங்காவில் முதல் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டின் உரிமையை விட்டுகொடுத்தவர் இ.பி.எஸ்
கடந்த ஐந்து ஆண்டுகளில் தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் சுற்றுலா மேம்பாடு, அதியமான் கோட்டம் புதுப்பிப்பு, மலைவாழ் பகுதிகளுக்கு முதல்முதலாக பேருந்து வசதி, இன்னுயிர் காப்போம், இதயம் காப்போம், சிறுநீரக பாதுகாப்பு திட்டம், கலைஞர் கனவு இல்லம் என பெரிய பட்டியல் உள்ளது. இப்படி சொல்லும் அளவு பழனிச்சாமிடம் சாதனை ஏதாவது இருக்கிறதா? ஏதாவது ஒன்று சொல்ல முடியுமா? எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்து அடிமையாக இருப்பது தான் தனது வாழ்நாள் சாதனையாக கொண்டு இருக்கிறார்.
இப்போது தமிழ்நாட்டுக்கு பெரிய ஆபத்து வந்துள்ளது அனைவருக்கும் தெரியும். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழ்நாட்டில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தும் போது, நமது எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராடிக் கொண்டு இருப்பார்கள். நாளைக்கு நாம் குரல் எழுப்ப தவறி விட்டால் நமது குரல் எப்போது ஒலிக்காது. நாம் அடிக்கிற அடியில் ..க அடங்கியே ஆக வேண்டும். பழனிசாமி அவர்களே இது தமிழ்நாட்டுக்கான போர். இதில் சுயமரியாதையோடு நடந்து கொள்ளுங்கள். அடிமை ஆவதும், துரோகி ஆவதும் பழனிசாமிக்கு மட்டும் பழக்கம் அல்ல, அவரோடு வருபவர்களுக்கும் தான்.
அன்புமணியை விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
மருத்துவர் ராமதாசை வேதனை தவிக்க விட்டு ஊழல் வழக்கிற்கு பயந்து உலக மகா உத்தமர் போல ஒருவர் நடித்துக் கொண்டு இருக்கிறார். அவரைப் பற்றி நான் ஒரு வார்த்தை கூட பேச விரும்பவில்லை. மருத்துவர் அய்யாவே அவரை அசிங்கம் என்று சொல்கிறார். பா.ஜ.க வின் திட்டம் தெற்கே தேய வேண்டும். தொகுதி சீரமைப்பு நடத்துவதாக சொல்லி போரை தொடங்கி இருக்கிறார்கள்.
இந்தப் போரில் தமிழ்நாட்டின் குரலை நெருக்க நினைக்கின்ற பா.ஜ.க வின் கொட்டத்தை அடக்க வேண்டும். பா.ஜ.க வுக்கு கொடுக்கிற அடியில் அவர்கள் வாழ்நாளில் தமிழகத்தை திரும்ப பார்க்க கூடாது. சண்டை செய்ய நான் ரெடி ? நீங்க ரெடியா ? எடப்பாடி பழனிசாமி மகளிர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஸ்டாலின் பேசுவதாக பேசுகிறார். பழனிசாமி அவர்களே உங்கள் உள்நோக்கம் வசை பாடுவது கிடையாது. உங்கள் ஓனர் பா.ஜ.க வை காப்பாற்றுவது. அதனால் தான் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கவில்லை. தொகுதி சீரமைப்பால் ஏற்படுத்தக் கூடிய பேராபத்து குறித்து குரல் கொடுக்காத நீங்கள் எதற்காக கட்சி நடத்துகிறீர்கள்? நீங்களே கட்சியை கலைத்து விட்டு பாஜகவில் ஐக்கியம் ஆகி விடுங்கள். கூச்சப்படாதீங்க" என்று ஸ்டாலின் பேசினார்.

0 கருத்துகள்: