ஞாயிறு, 12 ஏப்ரல், 2026

கலைஞருக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரதமிருந்தார் - தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் !!!

SHARE

 கலைஞருக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரதமிருந்தார் - தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் !!!

கலைஞரின் உயிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரதம் இருந்ததாக அரக்கோணம் தி.மு.க எம்.பி. ஜெகத்ரட்சகன் தெரிவித்து உள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெகத்ரட்சகன் எம்.பி., "மயிலம் தொகுதியில் செல்லும் இடங்களில் எல்லாம் எங்களுக்கு பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளித்தனர். குறிப்பாக, பெண்கள் முதலமைச்சரையும், அரசையும் பாராட்டுகின்றனர். தமிழ்நாட்டில் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் மயிலம் தொகுதி வேட்பாளர் வெங்கடேசன் வெற்றி பெறுவார் என்பது பிரச்சாரத்தின் போது மக்கள் அளிக்கும் ஆதரவும் மூலம் தெரிகிறது.

எங்களுக்கு எதை பற்றியும் கவலையில்லை; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன உத்தரவிடுகிறாரோ, அதை நாங்கள் செய்து முடிப்போம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவு மட்டுமே எங்களுக்கு முக்கியம். கூட்டணி என்றால் மட்டும் என்ன, அவர்களும் எங்களுடைய உறவுகள் தான்; எங்களுடன் பிறந்தவர்கள் தான். பிரித்துப் பார்க்கும் எண்ணம் எங்களிடம் இல்லை.

தேர்தல் பிரச்சாரத்தின் போது தனி மனித தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. அரசியல் பக்குவம் என்பது கண்டிப்பாக வேண்டும். சில வார்த்தைகள் மிகவும் கடுமையாக உள்ளது. எங்களது கட்சி தொண்டர்கள் கொதித்துப் போய் விட்டார்கள். எங்களுடைய தொண்டர்களை நாங்கள் கட்டுப்படுத்தி வைத்து உள்ளோம்; சில வார்த்தைகளை கேள்விப்பட்டதும் என்னால் கோவத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

நாங்கள் 50, 60 ஆண்டு காலமாக தி.மு.க வில் இருந்து வருகிறோம். எங்களுக்கும் பேச தெரியும். ஆனால் எங்களை கட்டுப்படுத்தி வைத்து உள்ளனர். நாகரிக அரசியல் மட்டுமே எங்களுக்கு தெரியும். கலைஞரை நாங்கள் சிறை வைத்ததாகக் கூறுகின்றனர். காவேரி மருத்துவமனையில் கலைஞர் ஒரு மாத காலமாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நானும், அண்ணன் துரைமுருகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அவரை எவ்வாறு கவனித்துக் கொண்டோம் என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும்.

டீ, உணவு இல்லாமல் தனது தந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் துடித்தார். கலைஞரின் உயிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் விரதம் இருந்தார். எடப்பாடி பழனிசாமி ஏதோ ஒரு வகையில் திடீரென முதலமைச்சர் ஆகிவிட்டார்; அவருக்கு அரசியல் பக்குவம் தெரிய வேண்டும்" என்றார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: