ஞாயிறு, 12 ஏப்ரல், 2026

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நிறைய பேர் கைது செய்யப்படவில்லை - பிஎஸ்பி தமிழக தலைவர் ஆனந்தன் !!!

SHARE

 ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நிறைய பேர் கைது செய்யப்படவில்லை - பிஎஸ்பி தமிழக தலைவர் ஆனந்தன் !!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இன்னும் நிறைய பேர் கைது செய்யப்படவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன், "தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 118 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடுகிறது. எந்த ஒரு வழக்கிலும் தொடர்பில்லாதவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளோம். ஒரு கட்சியின் மாநில தலைவர் அவரது வீட்டின் அருகிலேயே கொலை செய்யப்படுகிறார். இதில் இருந்தே ஒரு மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது தெரிகிறது. அ.தி.மு.க கூட்டணி எங்களுடைய கட்சி கொடியை சட்ட விரோதமாக பயன்படுத்தி உள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதியில் வளர்மதி எங்கள் கொடியை பயன்படுத்துகிறார். அதனை அவர்கள் தவிர்க்க வேண்டும்.

எஸ்.டி, எஸ்.சி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.3,800 கோடி பணத்தை கொண்டே தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு ரூ.5,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது. தி.மு.க அரசு ஏமாற்றும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி சட்டமன்ற தேர்தலில் நிற்பது அவரது தனிப்பட்ட விருப்பம். அது எங்களை எந்த விதத்திலும் பாதிக்காது. அண்ணன் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு பிறகு பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாட்டில் அழிந்து விடும் என்று சிலர் பகல் கனவு கண்டனர். ஆனால் அவரது மறைவுக்கு பிறகு, அவர் இருந்த காலத்தை விட இப்போது 100 மடங்கு கட்சி வளர்ச்சி அடைந்து உள்ளது. அவரது மரணம், அவரது தியாகம், இந்த கட்சி தமிழ்நாடு முழுவதும் பரவுவதற்கு பெரிய எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை அழிக்க நினைத்தவர்கள், நாங்கள் 100 மடங்கு வளர்ந்ததை நினைத்து வருந்துகிறார்கள்" என்றார்.

மேலும் பேசிய அவர், "முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பிரச்சாரம் செய்வதை வரவேற்கிறோம். அதே சமயம், அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த வழக்கை சி.பி.ஐ க்கு ஒப்படைப்போம் என்று ஏன் தெளிவான வாக்குறுதி தரவில்லை? இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களைவிட இன்னும் கைது செய்யப்படாதவர்கள் அதிகம் உள்ளனர். இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர்களும், அரசியல் பின்னணி கொண்டவர்களும் இதுவரை கைது செய்யப்படவில்லை" என தெரிவித்தார்.

ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கோடி திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதியில், அ.தி.மு.க சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: