வெள்ளி, 10 ஏப்ரல், 2026

மாம்பழம் சின்னம் எனக்கு வேண்டாம் ; கோர்ட்டில் பின்வாங்கிய ராமதாஸ் !!!

SHARE

 மாம்பழம் சின்னம் எனக்கு வேண்டாம் ; கோர்ட்டில் பின்வாங்கிய ராமதாஸ் !!!

இருதரப்புக்கும் இடையே பிரச்சனை இருக்கும் போது, அதில் தீர்வு எட்டப்படாத நிலையில் ஒரு தரப்புக்கு தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கியது தவறு என்று ராமதாஸ் தரப்பு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்டது.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மாம்பழம் சின்னம் தனக்கு வேண்டாம் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் அன்புமணி தரப்பு பா.ம.க வுக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதை அடுத்து மாம்பழம் சின்னத்தை இந்த தேர்தலில் முடக்க வேண்டும் எனக் கோரி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ், உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் பதில் அளித்த தேர்தல் ஆணையம், "அன்புமணி மற்றும் ராமதாஸ் என்ற தனி நபர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படவில்லை. பா.ம.க என்ற கட்சியின் பெயரில் மட்டுமே சின்னம் ஒதுக்கப்பட்டது. கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவது தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகளில் ஒன்று" என்று தெரிவித்தது.

தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று, அன்புமணி தரப்புக்கு ஒதுக்கப்பட்ட மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டும் என்ற ராமதாஸின் மனுவை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தரப்பில், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மீண்டும் உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று ராமதாஸ் தரப்புக்கு உத்தரவிட்டது.

இதை அடுத்து, ராமதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மாம்பழம் சின்னம் எங்களுக்கு வேண்டாம். இரு தரப்புக்கும் இடையே பிரச்சனை இருக்கும் போது, அதில் தீர்வு எட்டப்படாத நிலையில் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஒரு தரப்புக்கு தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கியது தவறு.

பா.ம.க வில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டதை பலமுறை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. உரிமையியல் நீதிமன்றம் பிரச்சனையை தீர்க்காமல், மீண்டும் தேர்தல் ஆணையத்தையே அணுக உத்தரவிட்டது தவறு" என்று வாதிட்டார்.

அதைத் தொடர்ந்து, அப்போது அன்புமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "தேர்தல் ஆணையத்தை அணுகும்படி ராமதாசுக்கு உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவர் தேர்தல் ஆணையத்தை அணுகாமல் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்து உள்ளார். புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து உள்ளது. தமிழகத்திலும் வேட்புமனு தாக்கல், சரிபார்ப்பு மற்றும் திரும்ப பெறுதல் முடிந்து உள்ளது. எனவே, இப்போது சின்னத்தை முடக்க முடியாது" என்று வாதிட்டார்.

இதை அடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அன்புமணி தரப்பு வாதத்திற்காக வழக்கை இன்று (ஏப்ரல் 10) ஒத்திவைத்தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: